108 வயது மூதாட்டி 3 விதவை மகள்கள்.. பறிபோன 11 ஏக்கர் நிலம்..! கனிவாக விசாரித்த காவல் அதிகாரி

0 19095

விழுப்புரம் அருகே குடும்பச் சொத்தான வீடு மற்றும் 11 ஏக்கர் நிலத்தை தன் பெயருக்கு மாற்றிக் கொண்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர், தனது 108 வயது தாய் மற்றும் 3 விதவை சகோதரிகளை வீதியில் தவிக்க விட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், சிறுவந்தாடு கிராமத்தை சேர்ந்த 108 வயதான கிருஷ்ணவேணி. இவர் தனது மூன்று விதவை மகள்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருவதாகக் கூறப்படுகின்றது.

கணவனை இழந்த 3 மகள்களுடன் மிகவும் ஏழ்மையான நிலையில் தவித்த அந்த மூதாட்டி, தனக்கு சொந்தமாக அப்பகுதியில் உள்ள 11 ஏக்கர் நிலத்தையும், பூர்வீக வீட்டையும், ஓய்வுபெற்ற அரசு ஊழியரான தனது மகன் கணேசன் எழுதி வாங்கி கொண்டு தன்னை கவனிக்காமல் விட்டு விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனை சந்தித்து புகார் அளித்தால் தீர்வு கிடைக்கும் என்று அக்கம்பக்கத்தினர் நம்பிக்கை தெரிவிக்க, அதனை ஏற்று 3 மகள்களுடன் அந்த 108 வயது மூதாட்டி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு சென்றார்.

இதனை அறிந்த காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், மாடியில் உள்ள தனது அறையில் இருந்து தரைதளத்திற்கு வந்து புகாரை பெற்றுக் கொண்டார். தனது நிலத்தில் சிறிய ஓலைகுடிசை அமைத்துக் கொடுத்தால் கூட போதும், தனது மகள்களுடன் அதில் தங்கிக் கொள்வதாகக் கூறி மூதாட்டி வேண்டுகோள் விடுத்தார்.

மூதாட்டியின் மகன் கணேசன் தமிழகத்தில் அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தற்போது குடும்பத்துடன் புதுச்சேரியில் செட்டில் ஆனதாக தெரியவந்ததும், மூதாட்டியின் புகார் குறித்து விசாரித்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வளவனூர் போலீசாருக்கு காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

உடனடியாக புதுச்சேரியில் உள்ள மூதாட்டியின் மகன் கணேசனுக்கு, விசாரணைக்காக வெள்ளிக்கிழமை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பானை விடப்பட்டது.

தமிழகத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு பூர்வீக சொத்தில் பங்கு உண்டு என்பதையும், சொத்துக்களை முறையாக எழுதி வாங்கிக் கொண்டால்கூட, தாய் தந்தையை கடைசி காலம் வரை பெற்ற மகன்கள் வைத்து பராமரிக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு தேவையான பணத்தை வழங்க வேண்டும் என்று சட்டத்தில் இடம் உள்ளதால் காவல் கண்காணிப்பாளர் இதனை தனிக்கவனம் எடுத்து நேரடியாக விசாரிப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments