500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..! பிரமாண்ட பவளப்பாறை

0 3061
500 மீ உயரம்... ஒன்றரை கி.மீ அகலம்..! பிரமாண்ட பவளப்பாறை

பூமியில் உயரமான கட்டிடங்களுக்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படும் அமெரிக்காவின் நியூயார்க்கில் அமைந்துள்ள எம்பயர் ஸ்டேட் பில்டிங் மற்றும் பிரான்சின் ஈபிள் கோபுரத்தை விடவும் உயரமான பவளப்பாறை ஒன்றை கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் டாஸ்மேனியா தீவுக்கு அருகே உள்ள கிரேட் பேரியர் ரீஃப் எனப்படும் உலகின் மிகவும் பெரிய பவளப்பாறைத் திட்டுக்கள் குறித்து அமெரிக்க, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அப்போது, சுமார் 500 மீட்டர் உயரமும், ஒன்றரை கிலோமீட்டர் அகலமும் கொண்ட பவளப்பாறை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கூர்மையான மலை முகட்டைப் போல காணப்படும் இந்த பவளப்பாறை கடலுக்குள் சுமார் ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது. இந்தப் பவளப்பாறையானது கிரேட் பேரியர் ரீஃப்பிலிருந்து ஆறு கி.மீ தொலைவில் காணப்படுகிறது

ஜேஸ் கூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, முனைவர் ராபின் பீமன் தலைமையிலான  விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்தப் பவளப்பாறையைக் கண்டுபிடித்துள்ளனர். நீருக்கடியில் செயல்படும்  ‘சுபாஸ்டியன்’ என்று பெயரிடப்பட்டுள்ள ரோபோவைப் பயன்படுத்தி கடலுக்குள் உருவாகியுள்ள புதிய பவளப் பாறைகள் மற்று மலை முகடுகளை ஆய்வு செய்தபோதுதான் இந்தப் பிரமாண்ட பவளப்பாறை குறித்துத் தெரியவந்துள்ளது. ரோபோட் மூலம் எடுக்கப்பட்டுள்ள படங்கள் குயின்ஸ்லாந்து அருங்காட்சியகம் மற்றும் ட்ராபிகள் குயின்ஸ்லாந்து அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்கப்படும்.

பவளப் பாறைகளை ஆய்வு செய்த பீமன், “கடந்த 120 ஆண்டுகளில், தனித்துக் கண்டுபிடிக்கப்பட்ட பவளப்பாறைகளில் இதுதான் பெரியது. 2016 - ம் ஆண்டிலிருந்து, கிரேட் பேரியர் ரீஃப்பின் வடக்குப் பகுதியில் உள்ள பவளப் பாறைகளின் நிறம் மங்கிப் போயிருந்தாலும், தனித்துக் காணப்படும் இந்தப் பவளப்பாறைகள் சேதம் அடைந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை” என்று பீமன் தெரிவித்துள்ளார்.

யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ள கிரேட் பேரியர் ரீஃப் 2300 கி.மீ தூரத்துக்கு நீண்டுள்ளது. கிரேட் பேரியர் ரீஃப்பில் அமைந்துள்ள பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகள் கடந்த முப்பது ஆண்டுகளில் அழிந்துள்ளன என்பது கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், கிரேட் பேரியர் ரீஃப்க்கு அப்பால் ஈபிள் டவரை விடவும் உயரமான பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments