பில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது

0 2955
பில்லி - சூனியம் 45 நாள் பூஜை.. நகைகளுடன் தப்பிய சூனியக்காரி கைது

சென்னை நீலாங்கரையில் பில்லி சூனியம் எடுப்பதாக கூறி, 45 நாட்கள் வீட்டில் உள்ள தங்க நகைகளை பூஜையில் வைக்க வேண்டும் என மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். 

தவசி படத்தில் கூட்டத்தில் நிற்கும் நடிகர் வடிவேலுவிடம் பையில் உள்ள பணத்தை மறைக்காமல் பூஜையில் வைக்கவில்லை என்றால் ரத்தம் கக்கி சாவாய் என அச்சமூட்டி அவரிடம் பணம் பறிப்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

அது போன்று பில்லி சூனியம் எடுப்பதாக அச்சுறுத்தி பெண் சாமியார் நாராயணி என்பவர் நகைகளை வாங்கி ஏமாற்றியுள்ளார். தன்னை நாடி வருபவர்களிடம், உறவினர்களால் பில்லி, சூனியம் வைக்கப்பட்டிருப்பதால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், வீட்டில் உள்ள செல்வம் பெருகாமல் உள்ளது என்றும் போலிச் சாமியார் நாராயணி கதை அளந்து விட்டுள்ளார்.

வீட்டில் உள்ள அனைத்து பொன்னையும், பொருளையும் பூஜையில் 45 நாட்கள் வைத்தால், பில்லி சூனியம் நீங்கி செல்வம் பெருகும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். வீட்டில் உள்ள நகைகளில் ஒரு கிராமை கூட மறந்து பூஜையில் வைக்காமல் விட்டுவிட்டால் பில்லி, சூனியம் திரும்பி விடும் என அச்சமூட்டியதால், பயந்து போய் நகைகள் அனைத்தையும் பூஜையில் வைத்துள்ளனர்.

45 நாட்கள் பூஜையில் வைத்துவிட்டு தங்க நகைகளை எடுத்துச் சென்றால் வளம் கொழிக்கும், வாழ்க்கை செழிக்கும் என்ற வார்த்தைகளை நம்பி நகைகள் அனைத்தையும் கொடுத்ததாகவும், ஆனால் சில தினங்கள் பூஜைகள் செய்வது போல் நடித்து, திடீரென நகைகளுடன் வீட்டை காலி செய்துவிட்டு போலி சாமியார் மாயமாகிவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

துறைமுகத்தில் பணியாற்றும் சிவக்குமார் உள்பட நீலாங்கரையில் 4 பேரிடம் பில்லி சூனியம் எடுப்பதாக கூறி சுமார் 105 சவரன் நகை மற்றும் 8 லட்சம் ரூபாயை நாராயணி சுருட்டி விட்டதாக புகார் அளித்தனர்.

புகார்கள் குவிந்ததை அடுத்து, நாராயணியின் செல்போன் அழைப்புகளை சைபர் க்ரைம் போலீசார் ஆய்வு செய்ததில், செல்போன் சிக்னலை வைத்து அவர் இருக்கும் இடத்தை அறிந்து, நாராயணியை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் மோசடியை அரங்கேற்றியது எப்படி என்பது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஏழை, எளிய மக்கள் வசிக்கும் பகுதியில் வீடு எடுத்து தங்கி, ஏதேனும் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருந்தவர்களை பில்லி சூனியம் இருப்பதாக கூறி பயமுறுத்தியதாக கூறியுள்ளார். பில்லி சூனியம் எடுக்க தன்னை நம்பி வருபவர்களின் நகைகளை பூஜை செய்வது போல் ஏமாற்றி அபகரித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

மோசடியாக சுருட்டிய நகைகளை பாலவாக்கத்தில் ரத்தன் லால் என்பவருடைய அடகுக்கடையில் அடமானம் வைத்ததாகவும், அதில் வந்த பணத்தை வைத்து ஆடம்பரமாக வாழ்ந்தாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட நாராயணி சிறையில் அடைத்த காவல்துறையினர், நகை வாங்கிய ரத்தன்லாலிடம் விசாரித்து வருகின்றனர்.

மோசடி செய்து சுருட்டிய நகைகளை பாலவாக்கத்தில் அடகு கடை நடத்தி வரும் ரத்தின லால் மற்றும் அவரது மகன் ஹேம்நாத் ஆகியோரிடம் விற்றது தெரியவந்ததை அடுத்து நாராயணியுடன் சேர்த்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தாங்கள் வாங்கிய நகைகளை பெரும்பாலானவற்றை உருக்கி விற்று விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

மாந்தீரிகம் மற்றும் பில்லி சூனியம் என்ற பெயரில் மோசடி செய்யும் நபர்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும், எவரேனும் அது போன்ற செயல்களில் ஈடுபட்டால் காவல்துறையிடம் தகவல் தெரிவிக்கலாம் என்று துணை ஆணையர் விக்ரமன் கேட்டுக்கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments