’பந்தி முடிவதற்குள் சென்று சாப்பிடுங்கள்’ - ஒரு லட்சம் ரூபாய் மொய் பணத்தை அபேஸ் செய்த வாலிபர்...

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், ’மொய் எழுதுகிறேன்’ என்று சொல்லி மொய்ப் பணம் முழுவதையும் அபேஸ் செய்த மர்ம நபரைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்...
பாண்டியராஜனும், செந்திலும் நடித்த நகைச்சுவைத் திரைப்படம் ஊரைத் தெரிஞ்சிகிட்டேன். அந்தப் படத்தில் ஒரு திருமணத்துக்கு டிப்டாப்பாக செல்லும் பாண்டியராஜனும் செந்திலும், மணமக்களின் உறவினரான விசுவுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்துவிட்டு, மொய்ப் பணம் முழுவதையும் ஆட்டையப்போட்டுவிட்டு சென்றுவிடுவர். அதே போன்றதொரு சம்பவம் திருவள்ளூரில் நடைபெற்றுள்ளது...
திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்றிரவு ஊத்துக்கோட்டை மாம்பாக்கத்தைச் சேர்ந்த நவீன், ஆந்திர மாநிலம் தடாவைச் சேர்ந்த பிந்து ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அன்பளிப்பு பணத்தை மணமக்களிடம் வழங்கியுள்ளனர். மணமக்கள் அதனை வாங்கி தங்களது உறவினர்களிடம் கொடுத்து வந்தனர். இரவு மணமேடை அருகே வந்த மர்ம நபர் ஒருவர், ’நான் சாப்பிட்டுவிட்டேன்... நீங்கள் சென்று சாப்பிடுங்கள்’ என்று மொய் பையை வைத்திருந்தவரிடம் அக்கறையாகச் சொல்லியுள்ளார்.
பாசத்துடன் சாப்பிடச் சொன்ன இளைஞரை நம்பியவர் மொய் பையை அவரிடம் கொடுத்துவிட்டு பந்திக்குச் சென்றுள்ளார். சற்று நேரத்தில் மொய் கவர்கள் அடங்கிய பையை திருடிக் கொண்டு அந்த மர்ம நபர் அங்கிருந்து மாயமாக மறைந்து போயுள்ளார். காலம் கடந்த பிறகே மொய் பணம் முழுவதும் திருடப்பட்டுவிட்டதை அறிந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்... வரவேற்பு நிகழ்சியைப் பதிவு செய்த கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு திருமண வீட்டில் சுமார் 1 லட்ச ரூபாய் மொய் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்..!
Comments