சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை... வெள்ளக்காடான பெருநகரம்.!

0 2411
சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை... வெள்ளக்காடான பெருநகரம்.!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால், பிரதான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. ஒரு நாள் மழைக்கே, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து,வெள்ளக்காடாக மாறியதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்றிரவு 11 மணியளவில் பெய்யத் தொடங்கிய மழை, குறிப்பிட்ட கால இடைவெளிகளில், விட்டுவிட்டு, கனமழையாக பதிவானது. விடிய, விடிய பெய்த மழையால், சென்னை பெருநகரின் தாழ்வான பகுதிகளில், மழைநீர் தெப்பம்போல் தேங்கியது.

 

அண்ணா சாலையின் சில பகுதிகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் பழுதாகி சாலையிலேயே நின்றதால் வாகன ஓட்டிகள் செய்வதறியாது திகைத்துப் போயினர். பட்டுலாஸ் சாலையில் நின்றிருந்த கார், ஒருபுறமாக கவிழ்ந்துவிட, மற்ற வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்தப்படியே சென்றன.

 

கனமழையால், மெரினா காமராஜர் சாலை வெள்ளத்தில் தத்தளித்தது. அவ்வழியாக சென்ற வாகனங்கள் அனைத்துமே ஊர்ந்தபடியே சென்றன. மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் தேங்கியிருந்த மழைநீரை, மாநகராட்சி ஊழியர்கள், அகற்றினர்.

திருவல்லிக்கேணியில் தாழ்வான மற்றும் குறுகலான பகுதிகளில் பல அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது. தெருக்களில் தண்ணீர் தேங்கியதால், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல், மக்கள் அவதிக்குள்ளாகினர்.

 

ஆர்.கே.நகர் கொருக்குப்பேட்டை நெடுஞ்சாலையில் வெள்ளம் போல் பாய்ந்த மழைநீர், வீடுகளுக்குள்ளும் புகுந்தது. சென்னை வியாசர்பாடியில் சாலைகள், சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்கியது.

 

பெரம்பூர் மேட்டுப்பாளையம் பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசியது.
புதுப்பேட்டை வேலாயுதம் தெரு, ஐயா சாமி பிள்ளை தெருவில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது. மணலி விரைவு சாலையில் ஆறு போல் மழைநீர் தேங்கி நின்றது.

தேனாம்பேட்டை நக்கீரன் நகரில் தெருக்களில் தேங்கிய மழைநீர் வீடுகளுக்குள்ளும் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர். இராயப்பேட்டை ஜகதாம்பாள் காலனியில் மரம் முறிந்து கார் மீது விழுந்தது.

 

சென்னை பெருநகருக்கு உட்பட்ட தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, புறநகர் பகுதிகளான முடிச்சூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர், தாழ்வான பகுதிகளில், தெப்பம் போல் தேங்கியது.

 

சென்னை திருவான்மியூர் பணிமனையில் குளம்போல் மழைநீர் தேங்கி நின்றது. பாலவாக்கம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் தெருக்கள், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தததால், பொதுமக்கள் அவதியுற்றனர்.

 

கனமழையால் சாலைகளில் குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். முறிந்து விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். சூப்பர் சக்கர் இயந்திரம் மூலம் கழிவுநீர் கால்வாயில் உள்ள அடைப்புகள் சரிசெய்யப்பட்டன. இராயப்பேட்டை பெசன்ட் சாலையிலும் மழைநீர் அகற்றும் பணி நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments