7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரம்... ஆளுநர் மனசாட்சிப்படி செயல்பட வேண்டும்... திங்கட்கிழமைக்குள் நல்ல முடிவு வரும் என நீதிபதிகள் நம்பிக்கை

0 1015
7.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரம்... ஆளுநர் மனசாட்சிப்படி செயல்பட வேண்டும்... திங்கட்கிழமைக்குள் நல்ல முடிவு வரும் என நீதிபதிகள் நம்பிக்கை

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏழரை சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர் மிக விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை, திங்கட்கிழமை நல்ல முடிவு தெரியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏழரை சதவீத உள் ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே, நடைமுறைப்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, செப்டம்பர் 15 ஆம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டு, அன்றைய தினமே ஆளுநருக்கு அனுப்ப பட்ட நிலையில், 2 மாதங்களாக முடிவெடுக்கப்படவில்லை என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

அக்டோபர் 16ல் நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில்,400 முதல் 500 அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பினும் உள் ஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனில் 8 மாணவர்கள் மட்டுமே மருத்துவ இடங்களைப் பெற இயலும் என தெரிய வருவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

விதி 361ன் படி ஆளுநர் எந்த நீதிமன்றத்திற்கும் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்ற போதிலும், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கிய அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, மிக விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அரசமைப்பின் பொறுப்பில் இருப்பவர்கள் பதிலளிக்கும் அளவிற்கு நடந்து கொள்ள மாட்டார்கள் எனும் நம்பிக்கை காரணமாகவே இது போல விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். ஆகவே விரைவாக முடிவெடுப்பது அவசியம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த ஆண்டாவது 300 முதல் 400 அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ இடங்களில் சேர வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் நோக்கம் என தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து அரசு தலைமை வழக்கறிஞர், கால அவகாசம் கோரினார். இதையடுத்து, திங்கட்கிழமை இந்த விவாகரத்தில் நல்ல முடிவு தெரியவரும் என நீதிமன்றம் நம்புகிறது" எனக்கூறி வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments