'நானே இஸ்லாமிய நாடுகளின் ஒரே தலைவன்'- எர்டோகனின் தாகத்தால் தவிக்கும் துருக்கி

0 12586
துருக்கி அதிபர் எர்டோகன்

ட்டமான் இஸ்லாமிய பேரரசு, துருக்கியைத் தலைமையிடமாகக் கொண்டு வடகிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வட ஆப்ரிக்க நாடுகளை ஆட்சி செய்தது. கி.பி. 1500 - 1800 ஆம் ஆண்டுகளில் மிக வலுவான பேரரசாக இருந்தது. இதே போன்றதொரு இஸ்லாமிய பேரரசை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் துருக்கி அதிபர் ரெசெப் தாயூப் எர்டோகன் உள்ளார். இஸ்லாமிய நாடுகளின் நன்மதிப்பைப் பெற்று, அவற்றின் ஒரே  தலைவராகத் திகழ வேண்டும் என்கிற எண்ணத்துடன் செயல்படுகிறார். ஆனால், அவரது கனவுக்கு உதவிகரமாக இருக்க வேண்டிய துருக்கியின் பொருளாதாரம் தான் மிகவும் பலவீனமாக காணப்படுகிறது.

அதிபர் எர்டோகனின் ஆட்சியில் துருக்கி நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்து வரும் அந்நிய செலாவணி கையிருப்பு, ஏற்றுமதி வீழ்ச்சி, நாணய வீழ்ச்சி, தனிமைப்படுத்தப்படுதல் போன்ற காரணங்களால் துருக்கியின் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.  இதனால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

image

ஐரோப்பிய நாடுகளைப் போலத் துருக்கியிலும் கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை பரவத்தொடங்கிவிட்டது. கடந்த சில நாள்களாகத் துருக்கியில் ஒவ்வொரு நாளும் 2000 க்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இது, துருக்கியில் முதலீடு செய்துள்ளவர்களைக் கவலையடையச் செய்துள்ளது. பொருளாதார மீட்புக்கான வாய்ப்புகள் மங்கிவருவதாகக் கவலையடைந்துள்ளனர்.

இஸ்லாமிய நாடுகளில் சக்தி மிக்கதாகக் கருதப்படும் சவூதி அரேபியா ஏற்கெனவே துருக்கிக்கு எதிராகச் செயல்படத் தொடங்கிவிட்டது. துருக்கிக்கும் சவூதி அரேபியாவுக்கு இடையே, ’நீ பெரியவனா அல்லது நான் பெரியவனா’ எனும் பனிப்போர் தொடங்கி நீண்டகாலம் ஆகிவிட்டது. இந்த நிலையில் தான், ’மேட் இன் பிரான்ஸ்’ லேபிள் கொண்ட பொருள்கள் அனைத்தையும் புறக்கணிக்கும்படி எர்டோகன் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனின் முக்கிய நாடான பிரான்சுக்கு எதிராக எர்டோகன் செயல்படுவது மேலும் துருக்கியைத் தனிமைப்படுத்தி பொருளாதாரத்தை மேலும் பலவீனப்படுத்தும் என்று கருதப்படுகிறது. எர்டோகனின் பிரான்சுக்கு எதிரான புறக்கணிப்பு அழைப்பால், துருக்கி நாடு வர்த்தக விதிமுறைகளை மீறிவிட்டதாகவே ஐரோப்பிய ஒன்றியம் கருதுகிறது. இதையடுத்து துருக்கியுடனான வர்த்தகத்தை ஐரோப்பிய ஒன்றியம் முழுவதுமாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இதனால், துருக்கி ஐரோப்பிய சந்தை முழுவதையும் இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது, தொற்றுநோய் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கியின் பொருளாதாரத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது.

image

கொரோனா நோய் பரவலால், ஆகஸ்ட் மாதத்தில் துருக்கியின் பொருளாதாரம் 10 சதவிகிதத்துக்குச் சுருங்கியது. தற்போது, துருக்கியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 200 பில்லியன் டாலர் என்ற அளவில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இது மிக மோசமான நிலையாகும். துருக்கியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2013 - ம் ஆண்டு 951 பில்லியன் டாலர்கள், 2019 - ம் ஆண்டு 754 பில்லியன் டாலர்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

துருக்கியில் எர்டோகன் தலைவராக உள்ள ஏ.கே.பி கட்சியானது மக்கள் மத்தியில் நன் மதிப்பை இழந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் நடந்த கருத்துக் கணிப்பின்படி, எர்டோகனின் கட்சிக்கான ஆதரவு 31 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. 2018 நாடாளுமன்றத் தேர்தலில், எர்டோகனின் கட்சி 43 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

எர்டோகன், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாகத் தனது சுய மதிப்பீடுகளை மட்டும் அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இஸ்லாமிய நாடுகளின் பாதுகாவலனாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முயல்கிறார். அதனாலேயே, நாகர்னோ - காராபாக் விவகாரத்தில் அஸர்பைஜானுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். பிரான்சுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். இதற்கிடையே தான் துருக்கியின் நாணயமான லிரா டாலருக்கு எதிராக மிக மோசமாக சரிந்துள்ளது. இதனால், துருக்கி தங்கள் நாணயத்தைப் பாதுகாக்க பில்லியன் கணக்கான டாலர்களை விற்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால், துருக்கியின் அந்நிய செலாவணி கையிருப்புகள் வேகமாகக் குறைந்து வருகிறது...

எர்டோகனின் உலக ஆதிக்கத்துக்கான செயல்பாடுகள், ஏற்கெனவே பொருளாதார சரிவால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மக்களை ரத்தம் சிந்தவைக்கத் தொடங்கிவிட்டது என்றே சர்வதேச வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments