ஆளுநர்., மனசாட்சிக்கு விடையளிக்க வேண்டும்... நீதிபதிகள் கருத்து.!

0 1780
ஆளுநர்., மனசாட்சிக்கு விடையளிக்க வேண்டும்... நீதிபதிகள் கருத்து.!

மருத்துவப் படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில், தனது மனசாட்சிக்கு விடையளிக்கும் வகையில், ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும், முத்துக்குமார் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், 7 புள்ளி 5 விழுக்காடு உள் ஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுக்க, 3 முதல் 4 வார கால அவகாசம் தேவைப்படுகிறது என ஆளுநர் தெரிவித்திருப்பதாக கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பல கட்ட ஆலோசனை, யோசனைகளுக்கு பிறகே இந்த மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினர். நிலைமை இப்படி இருக்கையில், பல கோணங்களில் ஆலோசிக்க மேலும் அவகாசம் தேவையா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் பலர் இணைந்து இந்த மசோதாவை உருவாக்கியிருக்கும் போது, அதற்கு ஒப்புதல் அளிக்க, ஆளுநர் தரப்பில், கூடுதல் கால அவகாசம் கேட்பது விசித்திரமானது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி விட்ட சூழலில் விரைவாக முடிவெடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதுபோன்ற முடிவுகளில், நீதிமன்றத்திற்கு பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை என்றாலும், சூழல், அவசரம், அவசியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

ஏழை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொள்வது அவசியமானது என நீதிமன்றம் கருதுவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், ஆளுநர், தனது மனசாட்சிக்கு விடையளிக்கும் வகையில், முடிவெடுக்க வேண்டும் என கூறினர்.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கர்நாடகாவில் இதுபோல அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது என தெரிவித்தார். இதனை உறுதி செய்து தகவல் தெரிவிக்க தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை, பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments