"கோயில்களில் வித்யாரம்பம்..! குழந்தைகளுக்கு எழுத பயிற்சி"

0 1341
"கோயில்களில் வித்யாரம்பம்..! குழந்தைகளுக்கு எழுத பயிற்சி"

விஜயதசமியை முன்னிட்டு இன்று குழந்தைகளுக்கு எழுத கற்றுக் கொடுக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

விஜயதசமி அன்று தொடங்கப்படும் எந்த ஒரு செயலுக்கும் வெற்றி கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை ஆகும். இதையொட்டி தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க திட்டமிட்டுள்ள பெற்றோர், கோயிலுக்கு அழைத்து வந்து நாக்கில் எழுத்துகளை எழுதியும், பின்னர் குழந்தைகளின் கைகளை பிடித்து அரிசி, நெல் போன்ற தானியங்களில் எழுத வைத்தும் கற்றுக் கொடுப்பது வழக்கமாகும். அதன்படி பல்வேறு கோயில்களிலும் இன்று வித்யாரம்பம் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயிலில் குழந்தைகளின் நாக்கில் தங்கத்தால் அ, அம்மா என எழுதியும், பின்னர் குழந்தைகளின் கைகளை பிடித்து அரிசியில் ஹரி ஸ்ரீ கணபதாயே என எழுதியும் கற்றுக் கொடுக்கப்பட்டது. பின்னர் தங்களது தாய்மார்களுக்கு குழந்தைகள் பாத பூஜை செய்து ஆசி பெறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நாகர்கோயில்:

நாகர்கோயில் சரஸ்வதி கோயிலுக்கு குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர், அக்குழந்தைகளை மடியில் அமர வைத்து அவர்களின் நாக்கில் எழுதுகோல் போன்ற சாதனத்தால் தேனை தொட்டு எழுத்துகளை எழுதினர். பின்னர் குழந்தைகளின் கைகளை பிடித்து அரிசியில் எழுத வைத்து கற்றுக் கொடுத்தனர்.

சேலம்:

சேலம் சூரமங்கலம் குரங்கு சாவடியிலுள்ள ஐயப்பன் கோயிலில் காலை முதலே குழந்தைகளுடன் ஏராளமான பெற்றோர் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கு வரிசையாக அமர்ந்து, தங்களது மடியில் குழந்தைகளை அமர வைத்து அரிசியில் எழுத வைத்தனர்.

விருதுநகர்:

 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலுள்ள பிரசித்து பெற்ற சொக்கர்மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இருக்கும் வித்யா சரஸ்வதி சன்னதியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அங்கு குழந்தைகளை அழைத்து வந்த அவர்களின் கைகளை பிடித்து எழுத வைத்து பெற்றோர் கற்றுக் கொடுத்தனர்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் உள்ள புகழ்பெற்ற சரஸ்வதி கோயிலில் விஜயதசமியை ஒட்டி இன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. கோயிலுக்கு குழந்தைகளுடன் வந்த பெற்றோர், நோட்டு,பென்சில்,பேனாவை வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் கொரானா பரவல் கட்டுப்பாடு காரணமாக கோயிலுக்கு வெளியே மடியில் குழந்தைகளை அமரவைத்து தாம்புளத்தில் பரப்பப்பட்டு இருந்த நெல்லிலும், சிலேட்டுகளிலும் எழுத வைத்து எழுத கற்றுக் கொடுத்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி கலைமகள் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தைகளுடன் கலந்து கொண்ட பெற்றோர், கோயில் முன்பு வரிசையாக அமர்ந்து பச்சரிசியில் மஞ்சளை கொண்டு எழுத வைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments