இன்ஸ்டாவால் கொலைகாரனுடன் சிறுமிக்கு மலர்ந்த காதல்..! வாழ்க்கை சீரழிந்த சோகம்

0 3855
இன்ஸ்டாவால் கொலைகாரனுடன் சிறுமிக்கு மலர்ந்த காதல்..! வாழ்க்கை சீரழிந்த சோகம்

கோவையில் கொலைகாரன் என்று தெரியாமல் இன்ஸ்டாகிராமில் பழக்கமான இளைஞனின் ஆசை வார்த்தைகளை நம்பிச் சென்ற 15 வயது சிறுமி போலீசாரால் மீட்கப்பட்டு இருக்கிறார். சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பதின்ம வயது பிள்ளைகளை பெற்றோர் கண்காணிக்காமல் விட்டால் என்ன விபரீதம் நேரும் என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

கோவை புளியகுளத்தைச் சேர்ந்த 21 வயதான சண்முகம் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்துள்ளார். பெண்களுடன் பெர்சனல் சாட்டிங்கில் மூழ்கிய சண்முகத்துக்கு போத்தனூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அறிமுகமானார். இன்ஸ்டாகிராமில் தன்னை ஒரு ஹீரோ போல சித்தரித்து நாள்தோறும் புகைபடங்களை போட்டு வந்த சண்முகத்திடம் ஒரே மாதத்தில் காதலில் விழுந்திருக்கிறார் சிறுமி.

இரவு பகலாக செல்போன் சாட்டிங்கிலேயே மூழ்கிக்கிடந்த சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு அவரது செல்போனை வாங்கிப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து சிறுமியை கண்டித்துள்ளனர்.

காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்துவிட்டது என சிறுமி, சண்முகத்திடம் சொல்ல, வீட்டை விட்டு வந்துவிடு உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என அந்த காதல் சாத்தான் வேதம் ஓதி இருக்கின்றது. மேலும் சிறையில் இருந்தபோது தனக்கு பழக்கமான கஞ்சா கைதிகள் அமர்நாத், வல்லரசு ஆகியோர் உதவியுடன் இரு தினங்களுக்கு முன் சிறுமியை கடத்தியுள்ளான் சண்முகம்.

அவரை பாலியல் பலாத்காரம் செய்த இன்ஸ்டா காதலன் சண்முகம் தனக்குத் தெரிந்த பெண் ஒருவரது வீட்டில் அந்த சிறுமியை தங்கவைத்து இருக்கிறான். 18 வயது முடியும் வரை அந்தப் பெண் வீட்டிலேயே இருக்குமாறும் அதன் பின்னர் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டு நழுவியதாக கூறப்படுகின்றது.

இதற்கிடையே பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த சிறுமியை மீட்டனர். ஆனால் பெற்றோரோடு செல்ல மறுத்த சிறுமி, தாங்கள் கணவன் மனைவியாகி விட்டதால் காதலனுடன் தான் செல்வேன் என அடம்பிடித்தபடி இருந்தார்.

இதற்கிடையே சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி பலாத்காரம் செய்த சண்முகம், கடத்தலுக்கு உதவிய வல்லரசு, அமர்நாத் ஆகிய மூவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மூவரும் கொலை மற்றும் கஞ்சா வழக்குகளில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர்கள் என்பது தெரியவந்ததால். அந்த சிறுமியின் எதிர்காலம் கருதி அவரை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியை அடைத்து வைக்க வீட்டில் அடைக்கலம் கொடுத்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். 

உடலளவிலும் மனதளவிலும் பக்குவமடையாத பதின்ம வயதில், வாட்ஸ் அப், முகநூல் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் மூழ்கும் சிறுமிகள், தாங்கள் செய்வது தவறு என்பது தெரியாமலேயே இது போன்ற தவறான நபர்களிடம் சிக்கி வாழ்க்கையை தொலைத்து விடுவதாக வேதனை தெரிவிக்கும் காவல்துறையினர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கவனித்து பாதுகாப்பாக வளர்க்க தவறினால் இது போன்ற விபரீத சம்பவங்களில் சிக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments