செல்போனில் மன்மத லீலை.. ராங்காலர் கொலை..! விதவை பெண்ணின் குடும்பத்தினர் ஆத்திரம்

0 10605

கோவை அருகே விதவைப் பெண்ணுக்கு செல்போனில் தீராத காதல் தொல்லை கொடுத்து வந்த காவலாளியை, வீட்டிற்கு வரவழைத்து குடும்பமே சேர்ந்து கட்டிபோட்டு அடித்து கொலை செய்ததோடு சடலத்தை தண்டவாளத்தில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை பெரியார் நகர் பகுதியில் தண்டவாளம் அருகே காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர் அவரை யாரோ அடித்து கொலை செய்து தண்டவாளம் அருகே வீசி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அக்கம்பக்கத்தில் விசாரித்த போது கொலையான நபர் முந்தைய நாள் இரவில் அந்த பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்பவரை தேடி வந்ததாகவும் பின்னர் அவரது வீட்டில் உள்ளவர்கள் இவரை அடித்து விரட்டியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அந்த பெண்ணை பிடித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

கொல்லப்பட்டவர் கோவை ரத்தனபுரி பகுதியை சேர்ந்த பெரியசாமி. இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். காவலாளி வேலைபார்க்கும் இவர் வேறு ஒருவருக்கு போன் செய்த போது தவறுதலாக தனலெட்சுமியின் செல்போனுக்கு தொடர்பு கிடைத்துள்ளது. அவரும் வெகுளியாக பேசியதால் அவரை தனது காதல் வலையில் வீழ்த்த திட்டமிட்டு தொடர்ந்து செல்போனில் அழைத்து காதல் தொல்லை கொடுக்க தொடங்கி உள்ளான் பெரியசாமி.

அடிக்கடி அதே எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசிய அவன் ஒவ்வொருமுறையும் தனது அழைப்பை எடுத்து பேசிய தனலட்சுமியிடம் காதல் மொழி பேசியதோடு, தன்னுடன் தனிமையை கழிக்க வருமாறு ஆபாசமாகவும் அழைத்து தீராத தொல்லை கொடுத்துள்ளான்.

ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் தனக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தை வெளியில் சொல்ல தயங்கிய தனலெட்சுமி, ஒரு கட்டத்தில் அவனது தொல்லை தாங்காமல் தனது உறவினர் லட்சுமணனிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதையறிந்து ஆத்திரம் அடைந்த அவரது குடும்பத்தினர், தங்கள் வீட்டு பெண்ணுக்கு செல்போன் ராங்கால் மூலம் தீரா தொல்லை கொடுத்து வரும் பெரியசாமியை, சமார்த்தியமாக வீட்டிற்கு வரவழைத்து, தக்க பாடம் கற்பிக்க திட்டமிட்டுள்ளனர்.

சம்பவத்தன்று அந்த ராங்கால் பெரியசாமி தனலட்சுமிக்கு போன் செய்து வழக்கம் போல மன்மத மொழியில் பேச , தனலெட்சுமி தனது வீட்டில் யாரும் இல்லை என்று நைசாக பேசி அவனை காரமடையில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார், கோவையில் இருந்து ஆசையுடன் அவரது வீட்டை தேடி விசாரித்து வந்து சேர்ந்த அந்த பெரியசாமி வீட்டிற்குள் நுழைந்ததும், அங்கு தயாராக காத்திருந்த தனலட்சுமியின் தாய் மற்றும் அவரது உறவினர்கள் அந்த நபரை பிடித்து சராமாரியாக அடித்து உதைத்து வீட்டில் உள்ள மரத்தில் கட்டிவைத்து தர்மஅடி கொடுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

அந்த குடும்பத்தினர் பெரியசாமியின் சடலத்தை தூக்கிச்சென்று ரெயிலில் அடிபட்டு இறந்தது போல இருக்க வேண்டும் என்பதற்காக தண்டவாளத்திற்கு அருகே தூக்கி வீசியுள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக விதவை பெண் தனலெட்சுமி உள்ளிட்ட 5 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஆத்திரத்தில் மதி இழந்த அந்த குடும்பமே தற்போது கொலை வழக்கில் சிக்கியுள்ளது.

பெண்கள் தங்கள் செல்போனுக்கு அறிமுகம் இல்லா நபர்களிடம் இருந்து வரும் தவறான அழைப்புகள் தொடர்ந்து வந்தால் அதனை ஏற்காமல் தவிர்த்துவிடலாம், அதைவிடுத்து தொடர்ந்து தொல்லை கொடுத்தால் அருகில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்கலாம். இந்த சம்பவத்தில் கூட அவனை பிடித்து போலீசில் ஒப்படைத்து இருந்தால் குடும்பமே கொலை பழிக்கு ஆளாகி இருக்காது என்கின்றனர் காவல்துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments