'நீ ஒரு நாளைக்கு 25 பேருக்குத்தான் சிகிச்சை செய்யனும்!' - மிரட்டும் நகராட்சி ஊழியர்களிடம் போராடும் மருத்துவர்

0 10480

சிதம்பரத்தில் 40 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்துவரும் டாக்டரை மிரட்டிய நகராட்சி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் மாலைகட்டி தெருவைச் சேர்ந்தவர் அசோகன். டாக்டரான இவர் செங்கழுநீர் பிள்ளையார் கோயில் தெருவில் மருத்துவமனை நடத்தி வருகிறார், 2 ரூபாய் மட்டும் வாங்கிக் கொண்டு மருத்துவம் பார்த்த அசோகன் தற்போது 50 ரூபாய் கட்டணமாக வாங்குகிறார். இதனால், ஏழை எளிய மக்களின் நம்பிக்கைக்குரியவராக டாக்டர் அசோகன் பார்க்கப்பட்டார். சாகித்ய ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் டாக்டர். அசோகன் பெற்றுள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து மருத்துவ மனைகளும் பூட்டப்பட்டுக் கிடந்த நிலையிலும், டாக்டர். அசோகன் மருத்துவமனையைத் திறந்து நோயாளிகளுககு சிகிச்சையளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மருத்துவர் அசோகனை நகராட்சி ஊழியரான சுதாகர் என்பவர் ஒருமையில் பேசி மிரட்டி விட்டுச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 25 நபர்களுக்கு மேல் நீங்கள் மருத்துவம் பார்க்கக்கூடாது, இரண்டு நர்சுகளுக்கு மேல் நீங்கள் உதவிக்கு வைத்துக் கொள்ளக்கூடாது. இதை மீறி செயல்பட்டால், உங்கள் மருத்துவமனையை மூடி விடுவோம் என்று எச்சரித்துள்ளார். நகராட்சி ஊழியர் டாக்டரை மிரட்டிய காட்சியை சிலர் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

இந்த விவகாரம் குறித்து மருத்துவர் அசோகன் கூறுகையில், ''சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ளேன். எந்தவித லாப நோக்கமின்றி இந்த மருத்துவமனையை நடத்திவருகிறேன். இந்த காம்ப்ளக்சில் அனைவரும் வந்து செல்வார்கள். அந்தக் கூட்டத்தை என்னால் கட்டுப்படுத்த இயலாது, எங்களது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை மட்டுமே என்னால் கண்காணிக்க முடியும். நாள் ஒன்றுக்கு 25 பேருக்கு மேல் மருத்துவம் செய்யக் கூடாது என்றால் நான் எப்படி எனது ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியும்?” என்று ஆதங்கத்தைக் கொட்டி தீர்த்தார்.

மூத்த மருத்துவர் என்றும் பாராமல் டாக்டர். அசோகனை ஒருமையில் பேசிய நகராட்சி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments