தங்க கடையா..? இல்ல தகர கடையா..? போலியான 916 நகைகள்

0 47773

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் 916 ஹால்மார்க் தங்க நகை என ஏமாற்றி விவசாயியிடம் போலியான நகையை விற்றதாக ஏ.ஐ.கே கோல்டன் குரூப் நகைகடை நிர்வாகத்தினர் சிக்கியுள்ளனர். ஹால் மார்க் முத்திரை பதிக்கப்பட்ட தரம் குறைந்த நகை சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

தென்காசி மாவட்டம் புளியங்குடி புன்னையாபுரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராமர். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ந்தேதி கடையநல்லூர் நத்தக்கர் பள்ளிவாசல் தெருவில் உள்ள ஏ ஐ கே கோல்டன் குரூப் நகைக்கடையில் 20 கிராம் எடை கொண்ட தங்கச் சங்கிலி ஒன்றை வாங்கியுள்ளார்.

அன்றைய மார்க்கெட் நிலவரப்படி 916 தரமுள்ள தங்க நகை ஒரு கிராம் 2 ஆயிரத்து 927 ரூபாய். மொத்தம் 58 ஆயிரத்து 627 ரூபாய் கொடுத்து அவர் அந்த தங்கச்சங்கிலியை விலைக்கு வாங்கியுள்ளார். அதற்கான பில்லும் பெற்றுள்ளார். இந்த நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த தங்க நகையை அவசர தேவைக்கு விற்பனை செய்வதற்காக புளியங்குடியில் உள்ள வேறொரு தங்க கடைக்கு சென்றுள்ளார்.

அந்த நகை கடையில் தங்க சங்கிலியை வாங்கி உரசிப் பார்த்த கடை அதிபர் ஹால்மார்க் உள்ள அந்தத் தங்கச் சங்கிலி ஒரு பாகத்தை எடுத்து உருக்கியுள்ளார் அப்பொழுது 64 டச் மட்டுமே உள்ள மட்டமான தங்க நகை என்பதை கண்டறிந்தார். உடனடியாக அவர் அந்த விவசாயிடம் தரம் குறைந்த நகை என்பதால் இந்த நகை விலை போகாது என்று அவர் தெரிவிக்கவே அதிர்ச்சி அடைந்த விவசாயி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கடையநல்லூரிலுள்ள ஏ.ஐ.கே கோல்டன் குரூப் நகைகடையில் தான் இந்த தங்க நகையை வாங்கியதாக கூறி, அதற்கான பில்லை கொண்டு வந்து நகைக்கடை உரிமையாளர் வசம் கொடுத்துள்ளார்.

நகை வாங்கிய விவசாயி ஏமாற்றப்பட்டது தொடர்பாக புளியங்குடி நகைக்கடை அதிபர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயி ஆகியோர் ஏ.ஐ.கே கோல்டன் குரூப் நகை கடைக்கு சென்று விளக்கம் கேட்டனர். சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் முன்னிலையில் அதனை உருக்கி 62 டச் தங்கம் மட்டுமே இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

பின்னர் தங்கள் கடையில் நடந்த தவறுக்கு உரிய இழப்பீடாக இன்றைய மார்க்கெட் நிலவரப்படி தங்கம் அல்லது பணம் கொடுப்பதாகவும் அந்தத் தங்கச் சங்கிலியை தங்களிடமே கொடுத்து விடுவதாகவும் கடை நிர்வாகத்தினர் விவசாயியிடம் தெரிவித்துள்ளனர்.

இதனை நகை வியாபாரிகள் சங்கத்தினரும், சம்பந்தப்பட்ட விவசாயியும் ஏற்க மறுத்ததோடு நாங்கள் இதுகுறித்து மேல் நடவடிக்கைக்காக நீதிமன்றம் செல்ல உள்ளதாகவும் தெரிவித்தனர்.

கடையநல்லூரில் வெளிநாட்டு தங்கம் விற்பனை செய்வதற்காக 100க்கும் மேற்பட்ட தங்க நகை கடைகள் செயல்பட்டு வருவதாகவும், இதில் சில கடைகளில் தரம் குறைந்த நகைகள் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த கடைகளில் தங்கம் வாங்குவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் கடையநல்லூரில் தரமான நகை கிடைக்கும் என்று வந்து நம்பி வாங்கிச் செல்வதாகவும், இதுபோன்ற முறைகேடுகள் நடப்பதால் மொத்தத்தில் தங்க நகை விற்பனை செய்பவர்களுக்கு பெரும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் நகை வியாபாரிகள் தெரிவித்தனர். அத்தோடில்லாமல் ஏ.ஐ.கே கோல்டன் குரூப் நகைகடையில் நகை வாங்கியவர்கள் தாங்கள் வாங்கிய நகைகளை தரமானவை தானா என்பதை சோதித்து பார்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தினர்.

தங்க நகை விற்பனையில் நடக்கின்ற மோசடியை தடுப்பதற்காகவே ஹால் மார்க் முத்திரையுடன் கூடிய 916 நகைகளை மட்டுமே விற்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் போலியான நகைக்கு ஹால் மார்க் முத்திரையுடன் 916 என்ற முத்திரையிடப்பட்டு தங்க நகை தகர நகையாக மாறியது குறித்தும் விரிவான விசாரணையை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments