'நான் அழகாக இல்லை; பெண் தர மறுக்கிறார்கள்! '- நம்பி சென்ற இளைஞரைக் கழுத்தறுத்து கொன்ற கும்பல்

சீர்காழி அருகே திருமண ஏக்கத்தில் இருந்த இளைஞரை ஏமாற்றி அழைத்து சென்று கொலை செய்து விட்டு , லேப்டாப் , செல்போனை பறித்த மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த எடமணல் கிராமத்தைச் இளைஞர்ன சந்தோஷ் கடந்த 10 -ம் தேதி வீட்டில் சென்னை செல்வதாகக் கூறிவிட்டு சிதம்பரம் சென்றுள்ளார். இந்த நிலையில், வடக்கு தில்லைநாயகபுரம் தனியார் கல்லூரி அருகேயுள்ள சுடுகாட்டுப் பகுதியில் மின் கம்பத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவர் சடலமாகக் கிடந்தார். தகவலறிந்த சிதம்பரம் டி.எஸ்.பி லாமேக் தலைமையில் போலீஸார் விசாரணை செய்து வந்தனர். சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும், சந்தோஷின் காணாமல் போன செல்போன் எண்ணையும் ஆய்வு செய்தனர். அப்போது, சிதம்பரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவில், டாஸ்மாக் கடையிலிருந்து சந்தோசுடன் சேர்ந்து மேலும் மூன்று பேர் வெளியே வரும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
சந்தோஷின் செல்போன் தமிழ்செல்வி என்ற பெண்ணிடம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்செல்வியை பிடித்து விசாரித்ததில் ராஜேஷ் என்பவர் இந்த செல்போனை விற்று தர தன்னிடம் தந்ததாக கூறியுள்ளார். தொடர்ந்து, ராஜேஷை பிடித்து போலீஸார் விசாரித்த போது, அதிர்ச்சித்தகவல்கள் கிடைத்தன.
கொலை நடந்த தினத்தில் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக்கில் சந்தோஷ் மது வாங்கி குடித்துள்ளார். சந்தோஷிடம் சைடிஷ் இல்லாமல் இருந்துள்ளது. அருகில் ராஜேந்திரன், ராஜேஷ், சுப்ரமணியன் ஆகிய மூன்று பேரும் போண்டாவுடன் மது அருந்தியுள்ளனர். அவர்களிடம் சந்தோஷ் கொஞ்சம் போண்டா கொடுக்குமாறு கேட்டுள்ளார். போண்டோ கொடுத்து பேச்சு கொடுத்த அவர்கள் மூன்று பேரும் சந்தோஷிடம் லேப்டாப், செல்போன், நிறைய பணம் இருப்பதை தெரிந்து கொண்டுள்ளனர். அவற்றைக் கொள்ளையடிக்க கண நேரத்தில் திட்டமும் போட்டனர். புதிய நண்பர்களின் திட்டம் தெரியாமல் சந்தோஷ் அவர்களிடம் மனம் திறந்து பேசியுள்ளார், 'தான் அழகாக இல்லை என்பதால் யாரும் பெண் கொடுக்க மறுக்கின்றனர். இதனால், எனக்குக் கல்யாணம் ஆவது தள்ளிப் போய் கொண்டிருக்கிறது ' என்றும் அப்பாவியாக கூறியுள்ளார்.
சந்தோஷ் திருமண ஏக்கத்தில் இருப்பதை அறிந்து கொண்ட மூன்று பேரும் உடனடியாக, பெண் பார்த்து திருமணம் செய்து வைப்பதாக அவருக்கு ஆசை காட்டியுள்ளனர். இதை நம்பிய சந்தோஷ் அந்த கும்பலுடன் பெண் பார்க்க ஆட்டோவில் புறப்பட்டுள்ளார். சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் ஆட்டோவில் இருந்து இறங்கியவர்கள் அங்கிருந்து 3 கிலோ மீட்டர் தூரம் சந்தோஷை நடத்தியே கூட்டி சென்றுள்ளனர்.
தொடர்ந்து, சுடுகாட்டு பகுதியில் வைத்து அவரிடத்திலிருந்த இருந்த டேப்டாப், செல்போன், மணிபார்சை பறித்துள்ளனர். சந்தோஷ் அவர்களிடம் சண்டையிட்டதால், மூன்று பேரும் சேர்ந்து அவரைக் கொலை செய்து மின்கம்பத்தில் கட்டி வைத்து விட்டு தலைமறைவாகி விட்டனர். பிறகு, செல்போனை விற்று தருமாறு ராஜேஷ் தனக்கு பழக்கமான தமிழ்செல்வியிடத்தில் கொடுத்துள்ளார். தமிழ்செல்வியிடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் குற்றவாளிகள் பிடிபட்டனர். கொலை சம்பவத்துக்கும் தமிழ் செல்விக்கும் தொடர்பு இல்லாத காரணத்தினால்,அவர் கைது செய்யப்படவில்லை.
Comments