முதல் கத்தி உடைந்தது; 30 நிமிடத்தில் புது கத்தி... தயாராக காத்திருந்த தனசேகரன்!- போலீஸார் கூறும் புதிய தகவல்கள்

0 10970

தி.மு.க பிரமுகர் தனசேகரன் வெட்டியதில் பொன்வேலின் இரு விரல்கள், துண்டானதால் அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.

எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த அமுதா என்ற பெண் தி.மு. க செயற்குழு உறுப்பினரான கே.கே.நகர் தனசேகரன் வீட்டில் தங்கி, அலுவல் பணிகளை கவனித்து வந்தார். கடந்த 8 மாதங்களாக அமுதா வீட்டுககு வராமல்  தனசேகரன் வீட்டிலேயே தங்கியிருந்ததாக கைது செய்யப்பட்ட பொன்வேல் வாக்குமூலம் அளித்துள்ளார். ஏற்கனவே, அமுதாவிற்கு அசோக் என்பவருடன் தொடர்பு இருந்ததாகவும், தற்போது வீட்டுக்கு வராமல் தனசேகரன் கட்டுப்பாட்டில் இருந்ததால் அமுதாவை கொலை செய்யும் திட்டத்தோடு தனது நண்பன் மணிவண்ணனோடு சென்றதாகவும் விசாரணையில் பொன்வேல் கூறியுள்ளார். அதே வேளையில், தனசேகரனை தாக்கும் திட்டத்தோடு செல்லவில்லை என பொன்வேல் கூறியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

நேற்றிரவு தனசேகரன் வீட்டுக்கு சென்ற பொன்வேல், முதலில் அமுதாவை செல்போனில் அழைத்து வெளியில் வர வைத்துள்ளான். பின், வீட்டுக்கு ஏன்  வரவில்லை என வாக்குவாதம் செய்த பொன்வேல், கையில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் குத்த முனைய அந்த பட்டா கத்தி உடைந்து போனது. இதனால் அங்கிருந்து தப்பிச் சென்ற பொன்வேல் மற்றோரு கத்தியுடன் 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் தனசேகரன் வீட்டுக்கு வந்துள்ளான். பொன்வேல், அமுதாவை வெளியில் வரச் சொல்லி கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த தனசேகரன் கத்தியுடன் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். இருவரும் கையில் கத்தியுடன் மோதிக் கொண்டுள்ளனர். தனசேகரன் வீட்டு வாசலில் ஆயுதங்களுடன் இருவரும் மோதிக் கொள்வது  சி.சி.டி.வியில் பதிவாகியுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

தனசேகரன் கத்தி வீசியதில் பொன்வேலின் இரண்டு விரல்கள் துண்டானது. உடனிருந்த  மணிவண்ணனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது, பொன்வேல் வெட்டியதில் தனசேகரன் தலை, கைகளில் காயம்பட்டு கீழே விழுந்துள்ளார். மற்றபடி, தனசேகரன் ஆதரவாளர்கள் விரட்டிச் சென்று இருவரையும் தாக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தனசேகரன் வீடு தேடி பொன்வேல் தாக்கிய பிறகே தனசேகரன் தாக்கியதால், அவர் மீது தற்காப்புக்காக தாக்கினார் என்ற அடிப்படையில் வழக்கு பதியாமல் விட்டு விடுவதா... அல்லது சட்ட ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்பதா ? என ஆலோசித்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்வேல், மணிவண்ணன் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ள போலீஸார் காயம்பட்டிருந்ததால், ஸ்டான்லி மருத்துவமனை சிறை வார்டில் அனுமதித்துள்ளனர்.

ஆய்வாளர் சுந்தர் தலைமையில் இருவருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments