ஐதராபாத்தில் வெளுத்து வாங்கிய மழை... கார்களும் சரக்கு வேன்களும் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன

0 1747
ஐதராபாத்தில் வெளுத்து வாங்கிய மழை... கார்களும் சரக்கு வேன்களும் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன

ஐதராபாத்தில் பெய்த கனமழையால் நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கார்களும் சரக்கு வேன்களும் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன...

ஹைதராபாதில் தொடர்ந்து பலமணி நேரமாகப் பெய்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சில பகுதிகளில் கார்கள், சரக்கு வேன்கள் போன்ற வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

மழை காரணமாக குடிநீர் தேக்கம் மற்றும் கால்வாய் மதகுகள் திறந்துவிடப்பட்டதால் நகரின் பல பகுதிகளில் இடுப்பளவு நீர் காணப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது.

ரங்கா ரெட்டி மாவட்டத்தில் பல இடங்களில் வீடுகளில் வெள்ளம் புகுந்தது. வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டவரை தீயணைப்புப் படையினர்போராடி மீட்டனர்.

இதனிடையே பந்தலகுடா பகுதியில் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் கொட்டும் மழையிலும் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த 24 மணி நேரத்தில் 20 சென்டிமீட்டர் மழை பெய்துள்ள நிலையில், மழைநீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திராவில் சூறாவளிப் புயல் மழை காரணமாக 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளையும் உடைமைகளையும் இழந்துள்ளனர். கோதாவரி ஆற்றின் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு அதிகமாக காணப்படுகிறது. பல்வேறு தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகனங்கள் நீரில் மூழ்கின. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது.

மேலும் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்ற வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும்படி முதலமைச்சர் ஜெகன்மோகன் உத்தரவிட்டுள்ளார். வெள்ளத்தால் பழுதான பாலங்கள் இடிந்துவிடக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படியும் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மழையால் இதுவரை எட்டு பேர் உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments