காத்திருந்து கழுத்தறுத்த பெண்.. முதியவர்கள் ஜாக்கிரதை..!

0 13549

கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூதாட்டிக்கு உதவுவது போல் உடன் பழகி, கொள்ளைக்கும் கொலைக்கும் திட்டம் போட்டது ஒரு பெண் என்பது தெரியவந்துள்ளது.

கோவை கெம்பட்டி காலனியைச் சேர்ந்த தனலட்சுமி என்ற 62 வயது மூதாட்டி கடந்த மாதம் 30ஆம் தேதி அவரது வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். வீட்டிலிருந்த 70 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இந்த சம்பவத்தில் மூதாட்டியுடன் நெருங்கிப் பழகி வந்த லதா என்ற பெண் உட்பட 5 பேரை கைது செய்து 30 சவரன் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.

கொலையான மூதாட்டி தனலட்சுமிக்கு ஒரு மகள், மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களில் மணிகண்டன் என்ற கடைசி மகன் தவிர்த்து மற்றவர்கள் திருமணமாகி வெளிநாடு, வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

மகன் மணிகண்டன் வேலை நிமித்தமாக அவ்வப்போது வெளியே செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் தனியாகவே இருக்கும் மூதாட்டி கடைக்குச் சென்று வரும்போது அதே பகுதியைச் சேர்ந்த லதா ராணி என்ற பெண் பழக்கமாகி இருக்கிறார். தனலட்சுமியின் வசதியான தோற்றத்தைக் கண்டு அவருக்கு உதவுவது போல் நாடகமாடி நெருக்கமான லதா ராணி, மூதாட்டி வீட்டில் ஏராளமான நகைகள் வைத்திருப்பதை மோப்பம் பிடித்துள்ளார்.

இரும்புப் பட்டறை ஒன்றில் வேலை செய்து வரும் லதா ராணியின் தம்பி திலக் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளான். இதனையடுத்து மூதாட்டி வீட்டில் கொள்ளையடிக்க லதா யோசனை கொடுத்துள்ளார்.

அதன்படி திலக்கும் பல நாட்களாக லதாவுடன் மூதாட்டி வீட்டுக்குச் சென்று நோட்டமிட்டுள்ளான். சம்பவத்தன்று திலக்கும் செல்வம் என்பவனும் மூதாட்டி வீட்டுக்குள் சென்று விஷம் கலந்த இனிப்பை மூதாட்டிக்கு கொடுத்துள்ளனர்.

லதாராணியின் தம்பி என்பதால் அவரும் நம்பி வாங்கி இனிப்பை சாப்பிட்டு இருக்கிறார். சிறிது நேரத்தில் தலை சுற்றல் மயக்கம் ஏற்படவே, சந்தேகம் கொண்ட தனலட்சுமி சத்தமிட்டுக் கொண்டே வெளியே ஓட முயற்சி செய்துள்ளார். இதனால் பதற்றமடைந்த செல்வமும் திலக்கும் அவரது தலையில் கட்டையால் அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

பின்னர் வீட்டிலிருந்த 70 சவரன் நகையை எடுத்துக்கொண்டு இருவரும் வெளியே வர, வெளியே ஆட்டோவில் தயாராகக் காத்திருந்த லதாராணி, அவளது தங்கை ரேவதிராணி, மனோஜ்குமார், சத்தியசீலன் ஆகியோருடன் தப்பியோடியுள்ளனர் என போலீசார் தெரிவிக்கின்றனர். திலக் தலைமறைவான நிலையில், மற்ற 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டில் நகை, பணம் வைத்திருப்பவர்கள், தங்களிடம் புதிதாக அறிமுகமாகி பழகுபவர்களிடம் கவனமாகவே இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments