காவலர் பயிற்சிப் பள்ளியிலும் திருநங்கை காவலருக்கு பாலியல் தொல்லை... சப்இன்ஸ்பெக்டர், காவலர் பணியிடை நீக்கம்

0 7538
காவலர் சம்யுத்தா

காவலர் பயிற்சிப் பள்ளியிலும் திருநங்கை காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சப்இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சியை அடுத்த நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் பெண் காவலர் பயிற்சிப் பள்ளி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் திருநங்கையான புதுக்கோட்டையைச் சேர்ந்த சம்யுத்தா ( வயது 25) காவலராகத் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்று வருகிறார். இந்த பயிற்சி கல்லூரியில் சிலர், சம்யுத்தாவை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சம்யுத்தா, காவலர் பயிற்சி கல்லூரி டி.ஐ.ஜி சத்யபிரியாவிடம் தொலைபேசியில் புகார் செய்துள்ளார். டிஐஜி உத்தரவின்பேரில் தூத்துக்குடி எஸ்.பி ராமகிருஷ்ணன் நேற்று முன்தினம் திருச்சி வந்து சம்யுத்தா, பெரியகருப்பன், மனோகரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி சென்றார்.

உயர் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டதால், ஆத்திரம் அடைந்த பயிற்சி பள்ளி சப்இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் காவலர் இஸ்ரேல் என்பவரும் சம்யுத்தாவிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சம்யுக்தா விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை அறையில் இருந்த சம்யுத்தா, டிஞ்சர் மருந்தை குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப் பார்த்த சக காவலர்கள், அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையில் உள்ள சம்யுத்தாவிடம் கேட்டபோது, நான் தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்கு வேறு எதுவும் காரணமல்ல என்றார். எனினும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பயிற்சி பள்ளி உதவி காவல் ஆய்வாளர் அசோக்குமார் மற்றும் காவலர் இஸ்ரேல் ஆகியோரை சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments