கிராமத்தைப் பாதுகாத்த பாடிகாவல் தலைவர்...  மதுரையில் முதல்முதலாக ஆசிரியம் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

0 11891
ஆசிரியம் கல்வெட்டு

துரை மாவட்டத்தில் கி.பி 13 - ம் நூற்றாண்டைச் சேர்ந்த  ஆசிரியம் கல்வெட்டு ஒன்றை வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மதுரை விமான நிலையம் அருகேயுள்ளது கூடல் செங்குளம். இங்குள்ள கண்மாயில் பழங்கால கல்வெட்டு இருப்பதை வரலாற்றுத்துறை மாணவர் ரஞ்சித்குமார் என்பவர் கண்டுபிடித்தார். இது தொடர்பாக, அவர்  கொடுத்த தகவல் அடிப்படையில் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் து.முனீஸ்வரன்,  லட்சுமணமூர்த்தி ஆகியோர் கல்வெட்டை  ஆய்வு செய்தனர். அது ஆசிரியம் ரக  கல்வெட்டு என்பதை உறுதி செய்தனர். 

ஊருக்கு பாதுகாப்பளித்து  காவல் செய்யும் பாடிகாவல் உரிமையை எந்த ஊருக்கு யார் பெற்றுள்ளார் என்பதை உறுதிப்படுத்தி அறிவிப்பதை ’ஆசிரியம் கொடுத்தல்’ என்பர். ஆசிரியம் என்ற சொல்லுக்குப் பாதுகாப்பு தருதல், அடைக்கலம் தருதல் என்று பொருள். இச்சொல் ஆசிரயம், ஆச்சரயம், ஆஸ்ரீயம் என்று கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இதுவரை, தமிழகத்தில் 75-க்கும் மேற்பட்ட ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த வகைக் கல்வெட்டுகள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

image

பாடிகாவல் முறையில், கிராமத்தை ஒரு குறிப்பிட்ட குழுவினர் காவல் காத்து வருவதை அனைவருக்கும் அறிவிக்கும் வகையில், கல்வெட்டை ஊரின் எல்லையிலோ, மையப்பகுதியிலோ, கோயில்களிலோ, நட்டு வைப்பது வழக்கம். கூடல் செங்குளம் கண்மாயில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டு, 3½ அடி நீளம், 1½ அகலமுள்ள கற்பலகையில், ‘பாடி நகரத்தேவர் கண்டிய தேவராஸ்ரீயம்’ என 5 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல்வெட்டு வாயிலாக மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் ஊரவர், நாட்டவர், சிற்றரசர்கள் மற்றும் படைப்பிரிவினர் அந்தந்த பகுதிகளில் படைகளை உருவாக்கி மக்களைப் பாதுகாத்து வந்ததும், கி.பி 1 3 - 14 ம் நூற்றாண்டு காலத்தில் கிராமங்களிலிருந்த நிலச்சுவாந்தார்கள் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இவர்கள் ஊர் பாதுகாப்புக்கென பாடிகாவல் நியமித்துக்கொள்ளும் வழக்கம் இருந்துள்ளது. பாடிகாவல் செய்வோர் குளம் வெட்டுதல், பாசனத்தை முறைப்படுத்தி வழங்குதல், கோவில் நிர்வாகம், பொது நிகழ்வுகளை முன்னெடுத்தல் போன்றவற்றுக்கான உரிமைகளையும் பெற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

image

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள, அரிய ஆசிரியம் கல்வெட்டு குறித்து பேராசிரியர்கள் கூறியதாவது...

”கல்லின் மேல்பகுதி உடைந்தநிலையில் உள்ளதால் இதன் முதல் வரியைப் படிக்க முடியவில்லை. இதில் சொல்லப்படும் பாடி கொம்பாடியாக இருக்கலாம். கொம்பாடி எனும் ஊர் இந்த கண்மாயின் தெற்கு பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  கொம்பாடி என்ற நகரத்துக்கு கண்டியதேவர் என்பவர் பாடிகாவலாக இருந்ததை உறுதிப்படுத்தி ஆசிரியம் கொடுத்துள்ளதை இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. இதன் கீழ்ப்பகுதியில் முக்காலி மீது பூர்ணகும்பமும், இருபக்கமும் குத்து விளக்குகளும் பொறிக்கப்பட்டுள்ளன. இது மதுரை மாவட்டத்தில் முதன்முதலாகக் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை ஆசிரியம் கல்வெட்டு இது” என்று தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments