டார்ச்சராக மாறிய பொருந்தாக் காதல் : சிறுமியை கழுத்தறுத்து, இளைஞன் தற்கொலை..!

0 16438

கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே, காதலித்த 16 வயது சிறுமியை  கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்ற நபர், நாமக்கல்  தப்பிச் செல்லும் வழியில் போலீசுக்கு பயந்து சேலத்தில் தற்கொலை செய்துகொண்டான்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த (கோவிந்தனின்) குடும்பம், சென்னை தாம்பரம் அருகே சேலையூர் பாரதி நகரில் வசித்து வந்த நிலையில், அந்த குடும்பத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை, வேளச்சேரியில் வசித்து வந்த சதீஷ் என்பவன் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமியின் குடும்பத்தார் குடும்ப நிகழ்ச்சி ஒன்றிற்காக கள்ளக்குறிச்சி அருகே உள்ள தொட்டியம் கிராமத்திற்கு வந்துள்ளனர். இதை அறிந்த சதீஷ், சென்னையில் இருந்து தனது பல்சர் பைக் மூலம் சிறுமியை தேடி தொட்டியம் கிராமத்திற்கு நேற்று மாலை வந்துள்ளான். சிறுமியை தொடர்பு கொண்டு வீட்டில் இருந்து வெளியே வரவழைத்து ஊருக்கு அருகிலுள்ள சுண்ணாம்புஓடை என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்கு தனிமையில் இருந்த நிலையில், இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சதீஷ் கத்தியை எடுத்து சிறுமியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளான்.

சிறுமி ரத்த வெள்ளத்தில் சாலையோரம் வந்து கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் அவ்வழியே வந்த சின்ன சேலம் காவல் துறையினர் சிறுமியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதேசமயம், நாமக்கல்லில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு செல்லும் நோக்கத்தோடு பைக்கில் சென்ற சதீஷ், வழியில் போலீசார் நடமாட்டத்தை பார்த்து, சேலம் உடையாப்பட்டி பைபாஸ் அருகிலுள்ள பெருமாள் கோவில் மேடு பகுதியில் உள்ள கரட்டில் நேற்று இரவு பதுங்கியுள்ளான். அங்கு மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் சதீஷின் சடலம் மீட்கப்பட்டது.

தன்னை திருமணம் செய்யுமாறு சதீஷை சிறுமி வற்புறுத்தியதால் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணம் செய்து கொள்ளாவிட்டால், தற்கொலை செய்துகொள்ளப் போவதாக சிறுமி தன்னை டார்ச்சர் செய்ததால் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி வந்ததாகவும், போக்சோ சட்டத்தில் தன்னை போலீசார் கைது செய்து விடுவார்கள் என பயந்து தற்கொலை செய்து கொள்வதாகவும் கடிதத்தில் சதீஷ் எழுதி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார்.

ஆனால், சதீஷுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டதாகவும், இனிமேல் சிறுமியோடு எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டேன் என எழுதிக் கொடுத்திருப்பதாகவும் சிறுமியின் தந்தை கூறியுள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments