தன்னம்பிக்கை பாடமெடுக்கும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியை

0 2732
தன்னம்பிக்கை பாடமெடுக்கும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியை

ஊரடங்கால் வருமானமின்றி தவித்து வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் மழலையர் பள்ளி தலைமை ஆசிரியை ஒருவர், ஆவின் பாலகம் தொடங்கி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் இல்லாததால், தமிழகம் முழுவதும் உள்ள 15 ஆயிரம் தனியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் முற்றாக முடங்கியுள்ளன.

வருமானம் இல்லாததால் அங்கு பணிபுரிந்த ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலையில் உள்ளதாக பள்ளி நிர்வாகங்களும் கூறுகின்றன. இதன் காரணமாக அங்கு பணிபுரிந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பொருளாதார ரீதியாக வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வி. 2 குழந்தைகளுக்குத் தாயான செல்வி முதுகலை இயற்பியல் முடித்து பிஎட் ஆசிரியர் பட்டமும் பெற்றுள்ளார்.

வண்ணாத்திக் குட்டையில் உள்ள தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வந்த செல்வியும் பள்ளிகள் மூடப்பட்டதால் பாதிக்கப்பட்டார். ஆனால் சுய தொழில் செய்ய முடிவெடுத்த செல்வி, ஆவின் நிறுவன மாவட்ட தலைமையகத்தை அணுகிய அவருக்கு வண்ணாத்திக்குட்டையிலேயே பால் பூத் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

காலை ,மாலை நேரத்தில் பால் விற்பனை செய்யும் செல்வி, இடைப்பட்ட நேரங்களில் குடும்பத்தினரை பார்த்துக்கொள்ள கூறிவிட்டு அக்கம்பக்கத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து வருவதாகக் கூறுகிறார். தனது இந்த முயற்சி பலனளித்ததைத் தொடர்ந்து சக ஆசிரியர்கள் பலரையும் சுய தொழில் தொடங்க உற்சாகம் கொடுத்து வருகிறார் செல்வி.

கொரோனா பாதிப்பு என்பது உலகளாவிய அளவில் சிறு, குறு தொழில் முதற்கொண்டு பெரு நிறுவனங்கள் வரை எதிர்பாராத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் தன்னம்பிக்கையும் சுய சார்பு வருமானமுமே பெருமளவில் கை கொடுக்கும் என்பதை செல்வி நிரூபித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments