வான்வெளி போரில் ருத்ர தாண்டவம் ஆடும் ருத்ரம்...

0 2634
வான்வெளி போரில் ருத்ர தாண்டவம் ஆடும் ருத்ரம்...

எதிரி நாட்டின் ரேடார்களை தாக்கி தகர்க்கும் நவீன ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ருத்ரம் ஏவுகணையால் விமானப்படையின் வலிமை அதிகரித்துள்ளது..

லடாக் எல்லை பிரச்சனையை அடுத்து இந்திய பாதுகாப்பு துறை அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி, அக்டோபர் 3 மற்றும் 5 ஆம் தேதிகள் என மூன்று ஏவுகணை சோதனைகள் இதுவரை நடைபெற்று உள்ளன.

அந்த வரிசையில் இன்று மற்றொரு நவீன ஏவுகணையை இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளது. ஒடிசா மாநிலம் பாலாச்சூரில் உள்ள தளத்தில் இன்று காலை 10.30 மணி அளவில் ருத்ரம்- 1 என்ற ஏவுகணையை ஏவி வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மிக 21 ரக விமானங்களில் இருந்து ஏவுக்கூடிய ருத்ரம் ஏவுகணை, எதிரிகளின் ரேடார் மற்றும் விமான போக்குவரத்தை கண்டறியும் சாதனங்களை குறி வைத்து தாக்கும் வல்லமை கொண்டதாகும்.

வானில் இருந்த தரை இலக்குகளை தாக்கும் இந்த ஏவுகணை, ஒலியை விட இரண்டு மடங்கு வேகத்தில் செல்லும்,பூமியில் இருந்து 500 மீட்டர் முதல் 15 கிலோ மீட்டர் உயரம் வரை பறக்கும் விமானத்தில் இருந்து இதனை ஏவ முடியும். மணிக்கு 2469 கிலோ மீட்டர் வேகத்தில் பாயும் ருத்ரம் ஏவுகணை, 140 கிலோ எடையும், 18 அடி நீளமும் கொண்டது. 250 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கையும் தாக்கும் இந்த ஏவுகணையை ஏவிய பின்னரும் கூட இலக்கை நோக்கி வழிநடத்த முடியும்.

மிராஜ், தேஜஸ், மிக் உள்ளிட்ட விமானங்களில் இருந்து ஏவக்கூடிய இந்த ஏவுகணை முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. எதிரிகளின் ரேடார் அமைப்புகள் வெளியிடும் கதிரியக்கத்தை கண்டறிந்து, அந்த இடத்தை சுக்கு நூறாக தாக்கும் வல்லமை ருத்ரம் ஏவுகணைக்கு உண்டு. கடந்த 2017 ஆம் ஆண்டில் அமெரிக்கா இதே போன்ற AGM-88E என்ற ஏவுகணையை அந்நாட்டு விமானப்படையில் இணைத்து உள்ளது.

அந்த ஏவுகணை, எதிரிகளின் ரேடார் அமைப்புகளை அணைத்து வைக்கப்பட்டாலும் கூட கண்டறிந்து தாக்கி அழிக்கும் என்றும், அதே போன்ற வல்லமை ருத்ரம் ஏவுகணைக்கும் உண்டு என்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ருத்ரம் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளதன் மூலம் எதிர் காலத்தில் இந்திய விமானப்படை, எதிரிகளின் பரப்பில் எந்த தடையும் இல்லாமல் ஊடுருவி தாக்க முடியும், என்றும் எதிரிகளால் இந்திய வான் படையை கண்டறிய முடியாத நிலை உருவாகும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ருத்ரம் ஏவுகணை பரிசோதனை வெற்றியை அடுத்து பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments