மத்தியமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

0 1894
மத்தியமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பீகாரைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானுக்கு டெல்லியில் உள்ள மருத்துவமனையொன்றில், சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், 74 வயதான ராம் விலாஸ் பாஸ்வான் மரணமடைந்ததாக அவரது மகனும், எம்பியுமான சிராக் பாஸ்வான், தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

அவரது மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கைக்குச் சொந்தகாரரான ராம்விலாஸ் பாஸ்வான், தாழ்த்தப்பட்ட, மற்றும் பழங்குடியின மக்களுக்காகவே இறுதிவரை போராடியதோடு, கடந்த 2000மாவது ஆண்டில், லோக் ஜனசக்தி என்ற பெயரில் தனிக்கட்சியும் தொடங்கினார்.

முன்னதாக 1977ம் ஆண்டு முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்ட ராம் விலாஸ் பாஸ்வான், சுமார் 4 லட்சத்து 24 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று கின்னஸ் சாதனை படைத்தார்.

இதுவரை 10 முறை எம்.பி.யாக தேர்வான ராம்விலாஸ் பாஸ்வான், 2014ஆம் ஆண்டு முதல், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசில், மத்திய நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments