அக்டோபர் 15ந் தேதி முதல் திரையரங்குகளை திறப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு... கண்டிப்பாக 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே ரசிகர்களை அனுமதிக்க உத்தரவு

0 3488
நாடு முழுவதும் திரையரங்குகளை திறக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

திரையரங்குகளில் உடல் வெப்ப பரிசோதனை செய்து, ஹேண்ட் வாஷ், சானிட்டைசர் வழங்கியே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க, கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் தியேட்டர்களும் நாடு முழுவதும் மூடப்பட்டன. வரும் 15 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ளார்.

ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்கும் முன்பாக கிருமி நாசினி தெளித்தல், பார்வையாளர்களுக்கு ஹேண்ட் வாஷ், சானிட்டைசர் வழங்குதல், மாஸ்க் அணிதல், உடல் வெப்ப பரிசோதனை செய்து, அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே அனுமதித்தல் போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். பார்வையாளர்களை ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த அறிவுறுத்துமாறும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

திரையரங்கில் அதிகபட்சமாக 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதற்கேற்ப இடைவெளிவிட்டு இருக்கைகளில் அமர அனுமதிக்க வேண்டும், அமரக்கூடாத இருக்கைகள் குறிக்கப்பட வேண்டும், ஒரே வளாகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் இருக்கும்போது கூட்டம் சேர்ந்துவிடாத வகையில் காட்சி நேரங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும், பாக்ஸ் ஆபிஸ் கவுன்ட்டர்கள் போதிய எண்ணிக்கையில் இருக்க வேண்டும், எப்போது வேண்டுமானாலும் டிக்கெட் வாங்க நாள் முழுவதும் திறந்திருக்க வேண்டும், வரிசையில் நிற்பதற்கு இடைவெளி விட்டு வட்டங்கள் வரைய வேண்டும், ரொக்கப் பணத்திற்கு பதிலாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையையும், ஆன்லைன் டிக்கெட் விற்பனை மற்றும் முன்பதிவையும் ஊக்குவிக்க வேண்டும், எச்சில் துப்ப அனுமதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேன்டீன்களில் போதிய எண்ணிக்கையில் கவுன்ட்டர்கள் இருக்க வேண்டும், கேன்டீன்களில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள், குளிர்பானங்களை மட்டுமே விற்க அனுமதிக்க வேண்டும், திரையரங்கினுள் நொறுக்குத் தீனி, குளிர்பானங்களை விநியோகிக்கக் கூடாது, ஏசி வசதி இருந்தால் 24 டிகிரி முதல் 30 டிகிரி சி வெப்பநிலையில் வைக்க வேண்டும், திரைப்பட இடைவேளையின் போது ரசிகர்கள் இருக்கைகளை விட்டு அங்கும் இங்கும் அலைவதை தவிர்க்க வேண்டும், திரைப்படம் துவங்கும் முன்பும் இடைவேளையின் போதும், முடிந்த பின்பும் கொரோனா விழிப்புணர்வு குறும்படங்களை திரையிட வேண்டும் என திரையரங்குகளுக்கு மத்திய அரசு வழிகாட்டுதல்தளை வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments