பிரத்யேக மொபைல் செயலி மூலம் ஐபிஎல் சூதாட்டம் : கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

0 3382
பிரத்யேக மொபைல் செயலி மூலம் ஐபிஎல் சூதாட்டம் : கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

பிரத்யேக மொபைல் செயலி மூலம், கல்லூரி மாணவர்களை குறிவைத்து பல நூறு கோடி ரூபாய் அளவில் கிரிக்கெட் சூதாட்டம் நடத்தி வந்த கும்பலை கைது செய்துள்ள ஹைதராபாத் போலீசார், கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். 

ஹைதராபாத்தில் உள்ள பசீராபாத் பகுதியில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை அடிப்படையாக வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

பிரத்யேக மொபைல் ஆப்கள் மூலம், பந்தயம் கட்டி சூதாட்டம் நடைபெறுவதை விசாரணையில் கண்டறிந்த போலீசார், சூதாட்ட கும்பலின் தலைவன் சந்தூர் சஷாங்க் என்பவனையும் அவனது கூட்டாளிகள் உள்ளிட்ட 8 பேரையும் கைது செய்தனர்.

23 லட்ச ரூபாய் பணம், 8 செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சூதாட்ட கும்பலை சேர்ந்த 8 பேர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு வங்கி கணக்கில் இருந்த 13 லட்ச ரூபாய் பணத்தை போலீசார் முடக்கி வைத்துள்ளனர். கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து இந்த கும்பல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுவரை சுமார் 730 கோடி ரூபாய் அளவில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Cricketline மற்றும் Cricket Exchange போன்ற ஆப்களை பயன்படுத்தி, கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள நபர்களை செல்போனில் தொடர்புகொண்டு குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யுமாறு கூறி, சூதாட்டம் நடைபெற்றதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மெயின் புக்கிகளுக்கு ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை உள்ளூர் புக்கியான சஷாங்க் மூலம் நடைபெற்றுள்ளது என்றும், போட்டியின் முடிவில் பணத்தை செட்டில் செய்வதும் அவன் மூலமே நடைபெற்றதாகவும் சைபராபாத் காவல் ஆணையர் VC Sajjanar தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் சூதாட்டத்திற்காக பலர் கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்து இருப்பதாகவும், கல்லூரி மாணவர்கள், இளைஞர்களும் இதில் ஈடுபடுவதால் பெற்றோர்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் சைபராபாத் காவல்துறை ஆணையர் சஜ்ஜனார் அறிவுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments