ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு

0 11296
ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு

திரையரங்குகள், கேளிக்கை பூங்காக்களை அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5வது கட்ட ஊரடங்கு தளர்வுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, நோய் கட்டுப்பாடு பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள், மல்டிபிளக்ஸ்களை திறக்கலாம். விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்காக நீச்சல் குளங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களை அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 15 ஆம் தேதிக்குப் பின் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து அதன் நிர்வாகங்களிடம் ஆலோசனை பெற்று மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம். எனினும் பெற்றோரிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி வாங்கிய பிறகே மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகுப்புகளை தொடர்ந்து செயல்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதம், அரசியல், விளையாட்டு, கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று இருந்த விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது. அக்டோபர் 15 ஆம் தேதிக்குப் பின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் 100க்கும் மேற்பட்ட நபர்களை மாநில அரசுகள் அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் திறந்தவெளி அல்லாமல் அறைகள் மூடப்பட்ட இடங்களில் 50 சதவீதம் பேர் அல்லது அதிகபட்சமாக 200 நபர்களை மட்டுமே அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அக்டோபர் 31 வரை ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்கவும், மற்ற பகுதிகளில் மத்திய அரசின் அனுமதியின்றி கட்டுப்பாடுகள் விதிக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், 10 வயதுக்குட்பட்ட சிறார்கள், கர்ப்பிணிகள், அத்தியாவசியம் மற்றும் மருத்துவ காரணத்திற்கு தவிர தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments