கடலைப்பருப்பு சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை... தொண்டையில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்!

0 16545
குழந்தை தர்ஷனா

திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் 18 மாத குழந்தை கடலைப் பருப்பைத் தின்றபோது, தொண்டையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகேயுள்ள செங்குளத்துப் பட்டியைச் சேர்ந்தவர் விஜய். கூலித் தொழில் செய்யும் விஜய்க்கு தர்ஷனா எனும் 18 மாத குழந்தை இருக்கிறார். திங்கள் கிழமையன்று வீட்டிலிருந்த தர்ஷனா கடலைப் பருப்பு சாப்பிட்டுள்ளார். அப்போது, யாரும் எதிர்பாராத விதமாகக் கடலைப் பருப்பு தர்ஷனாவின் தொண்டையில் சிக்கியது. இதனால், மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்ட தர்ஷனா மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்த தர்ஷனாவின் பெற்றோர் பதறியடித்தபடி குழந்தையைத் தூக்கிக்கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்து வந்த தர்ஷனா சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றிரவு மரணத்தைத் தழுவியது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

18 மாத கைக்குழந்தைக்கு என்னென்ன சாப்பிடக் கொடுக்க வேண்டும் என்பதைப் பெற்றோர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். அதை அறியாமல் கடலைப் பருப்பைத் தின்னக் கொடுத்து, தொண்டையில் சிக்கி குழந்தை மரணமடைந்துள்ளது பரிதாபத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments