உச்சரிப்பில் குழப்பம்.. எங்கப்பா தமிழ் வாத்தியார்ண்ணே..! ஆன்லைன் வகுப்பு சோகங்கள்

0 6409

தூத்துக்குடி ஈஷா வித்யலயா பள்ளியில் யூகேஜி மாணவிக்கு ஆன்லைன் வகுப்பில் தமிழ் உச்சரிப்பை சரியாக சொல்லிக் கொடுக்காமல் ஆசிரியை வீடியோ அனுப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தவறை சுட்டிக்காட்டிய பெற்றோரிடம் தமிழ் ஆசிரியை அளித்த சமாளிப்பு விளக்கம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

காமெடி காட்சி ஒன்றில் புஷ்பம் என்பதற்கு பதிலாக புய்ப்பம் என்று சிறுவனுக்கு தமிழ் உச்சரிப்பை தவறாக சொல்லிக்கொடுக்கும் நடிகர் செந்தில் தனது தந்தை தமிழ் வாத்தியார் எனக்கூறி கவுண்டமணியை குழப்புவார். அதே போன்றதொரு வேடிக்கையான சம்பவம் தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளியில் நடந்துள்ளது.

தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கபடாத நிலையில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகின்றன. இதன்மூலம் தங்கள் பிள்ளைகளுக்கு ஆசிரியைகள் எப்படி பாடம் நடத்துகிறார்கள் என்பதை பெற்றோர் அறிந்து கொள்ள முடிகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளியில் உள்ள ஈஷா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் யூகேஜி படிக்கின்ற சிறுமிக்கு ஆன்லைன் வகுப்பில் தமிழ் பாடம் நடத்திய ஆசிரியை ஒருவர் , தமிழில் உள்ள குறில் எழுத்தின் உச்சரிப்பை நெடில் எழுத்து போல உச்சரித்து அதனை வீடியோவாக பதிவு செய்து யூகேஜி மாணவிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

வ என்பதை வா என்று தவறாக உச்சரித்தும் ய் என்பதை ஈ என்றும் ப என்பதை பா என்றும் தவறாக உச்சரித்து படம் நடத்தி இருந்தார். இதனை பார்த்த மாணவியின் தந்தை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வாட்ஸ் ஆப்பில் குரல் பதிவு மூலம் தமிழ் உச்சரிப்பு தவறாக சொல்லிக் கொடுப்பதால் தனது குழந்தைகள் தமிழை எழுதுவதில் சிரமப்படுவதாக புகார் தெரிவித்துள்ளார்.

தனது தமிழ் உச்சரிப்பு தவறானதை பற்றி கவலைப்படாத அந்த தமிழ் ஆசிரியையோ, வட்டார வழக்கில் தான் ய, ப என்றும் மற்றபடி தமிழில் உச்சரிக்கும் போது யா, பா என தமிழ் வேறு மாதிரி இருக்கும் என்று புய்ப்பம் செந்தில் போல பதில் சொல்லி குழப்பியுள்ளார்.

புத்தகத்தில் உள்ள தமிழ் எழுத்துக்களை சரியாக உச்சரிப்பதில்லை என்று மாணவியிடம் தந்தை பலமுறை கோபித்துக் கொண்ட நிலையில் ஆன்லைன் வகுப்பு மூலம் தமிழ் ஆசிரியையே தமிழை சரியாக உச்சரிப்பதில்லை என்பது தற்போது தெரியவந்ததால் நொந்து போயுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments