நியாயவிலைக் கடையில் முறைகேடு.. காட்டிக் கொடுத்த “செயலி”..! “இப்படி மாட்டிவிட்டியேப்பா” புலம்பும் கடை கண்காணிப்பாளர்

0 12389

ஈரோடு அருகே 60 கிலோ அரிசிக்கு பில் போட்டுவிட்டு, 30 கிலோ அரிசி வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டு வந்த ரேஷன் கடை ஊழியரின் செயல் அரசு செயலி மூலம் அம்பலமாகியுள்ளது. தனது முறைகேட்டை கண்டுபிடித்த நபரிடம் ரேஷன் கடை ஊழியர் போனில் புலம்பும் ஆடியோவும் வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள TNEPDS என்ற அரசின் செயலி மூலம், நியாய விலைக் கடையில் உள்ள பொருட்களின் இருப்பு விபரம், வேலை நேரம், குடும்ப அட்டைதாரர் வாங்கும் பொருட்களின் விவரங்களை தெரிந்துகொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு அருகேயுள்ள நல்லாந்தொழுவைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் அங்குள்ள நியாயவிலைக்கடையில் தங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணை உள்ளிட்ட பொருட்களை வாங்கி வரும் போது, தான் வாங்கும் பொருட்களுக்கும் TNEPDS செயலியில் வாங்கியதாக காண்பிக்கும் பொருட்களின் அளவுக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் இருந்துள்ளது.

அரசின் செல்போன் செயலியில் 60 கிலோ அரிசி வழங்கப்பட்டுள்ளதாக காண்பிக்க, 30 கிலோ அரிசிதான் வீடு வந்து சேர்ந்திருக்கிறது. அரிசி மட்டுமின்றி எண்ணை, கோதுமை, சர்க்கரை உள்ளிட்டவற்றிலும் செயலியில் காண்பிக்கும் அளவு வித்தியாசப்பட்டு இருக்கிறது. இதனை கண்டுபிடித்த முருகானந்தத்தின் மனைவி, சந்தேகம் கொண்டு அவரிடம் சண்டை போட்டபின்னரே தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முருகானந்தம் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அளித்தார்.

இந்த விவகாரம் வெளியே தெரியவந்தத்தைத் தொடர்ந்து நியாயவிலைக் கடை கண்காணிப்பாளர் சேகர், முருகானந்தத்தை போனில் அழைத்து, “இப்படி மாட்டிவிட்டியேப்பா” என்கிற ரீதியில் புலம்பி இருக்கிறார். 

நல்லாந்தொழுவு நியாயவிலைக் கடை மட்டுமல்ல பெரும்பாலான நியாவிலைக்கடைகளில் ரேசன் பொருட்கள் வழங்குவதில் இது போன்ற முறைகேடுகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையில் மாவட்ட வட்டவழங்கல்துறை அதிகாரிகள் விரிவான ஆய்வுகள் நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments