களைகட்டும் பட்டாசு உற்பத்தி.. நம்பிக்கையுடன் உற்பத்தியாளர்கள்..!

0 2053

ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீளும் வகையில், பட்டாசு உற்பத்தி, விநியோகம் விற்பனை ஆகியவற்றில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியின் மிக முக்கிய தொழிலாக விளங்கக் கூடிய பட்டாசு தொழிலை சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் நம்பியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிக்கைக்காக ஏப்ரல் மாதம் துவங்கி நவம்பர் வரை பட்டாசு உற்பத்தி முழு வீச்சில் நடைபெறும்.

நடப்பாண்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக 2 மாதங்களுக்கு மேல் உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்பட்டு ஆலைகள் மூடப்பட்டன. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்தனர். தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு காலத்திற்கு முன்பு பெறப்பட்ட முன் பணத்திற்கு மட்டுமே பட்டாசுகள் அனுப்பப்பட்டு வருவதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

வாகன போக்குவரத்து, பட்டாசு வணிகத்துக்கான புதிய உரிமங்களை வழங்குதல், ஏற்கனவே உள்ள உரிமங்களை புதுப்பித்தல் உள்ளிட்டவற்றை துரிதப்படுத்த வேண்டும் என அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வழக்கமாக தீபாவளி பண்டிகை நேரத்தில் வாரம் முழுவதும் வேலை கிடைக்கும் என்று கூறும் தொழிலாளர்கள், தற்போது 2 முதல் 3 நாட்கள் மட்டுமே வேலை கிடைப்பதாகக் கூறுகின்றனர். எனவே தீபாவளிப் பண்டிகையை எவ்வித தடைகள், கட்டுப்பாடுகள் இன்றி கொண்டாட மத்திய, மாநில அரசுகள் வழிவகை செய்தால் மட்டுமே தங்களுக்கான வாழ்வாதாரம் கிடைக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments