பிறந்த ஊரை தாய் போல பராமரித்த எஸ்.பி.பி ... கலங்கி நிற்கும் கோனட்டம்பேட்டை!

0 72195
சொந்த கிராமத்தில் குடிநீர் வசதி செய்து கொடுக்கும் நிகழ்வில் எஸ்.பி.பி.


ஆந்திரா - தமிழக எல்லையிலுள்ள கோனேட்டம்பேட்டை என்ற கிராமம்தான் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் தாயார் பிறந்த ஊர். திருவள்ளுர் மாவட்டதில் பள்ளிபட்டு கிராமத்தில் அருகேயுள்ள இந்த கிராமத்தில் தன் தாத்தா வீட்டில் எஸ்.பி.பி. பிறந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் தந்தை எஸ்.பி. சாம்பமூர்த்தி ஹரிகதா கலைஞர் என்பதால் நாடகத் நடிப்பதற்காக ஊருக்கு ஊர் இடம் பெயர்ந்து கொண்டே இருப்பார். இதனால், தன் மனைவி கர்ப்பமானதையடுத்து கோனேட்டம்பேட்டை கிராமத்திலுள்ள அவரின் பெற்றோர் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.

அப்போதுதான், இந்த கிராமத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பிறந்துள்ளார். இந்த கிராமத்தில்தான் சிறுவயத்தில் 6 வருடங்கள் எஸ்.பி.பி. வளர்ந்தார். திரையுலகில் வளர்ந்து பெரிய பாடகரான பிறகும் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த கிராமத்துக்கு விசிட் அடிப்பதை எஸ்.பி. பாலசுப்ரமணியம் வழக்கமாக கொண்டிருந்தார். கிராமத்தில் பள்ளிகளை கட்டியுள்ளதோடு, கழிவறை உள்ளிட்ட சுகாதாரப்பணிகளையும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மேற்கொண்டிருந்தார்.

ஊருக்கு வரும்போதெல்லாம் கோயில், ஊரில் உள்ள குளம்... அவ்வளவு ஏன்... தான் சிறுவயதாக இருந்த போது, விளையாடிய ஆலமரத்தையும் மெனக்கெட்டு சென்று பார்த்து பழைய நினைவுகளில் மூழ்குவது எஸ்.பி.பி.யின் வழக்கம். ஊருக்கு சென்றால் தன் பால்ய கால நண்பர்களை கூப்பிட்டு பேசுவார். தேவைப்பட்ட உதவிகளையும் செய்வார் என்று அவருக்கு நெருக்கமான நண்பரான ராஜேந்திர பிரசாத் என்பவர் சொல்கிறார். கடந்த 2004 - ஆம் ஆண்டு ராஜேந்திர பிரசாத்தின் தந்தை இறந்த போது கோனேட்டம்பேட்டை கிராமத்துக்கு வந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் இறுதி மரியாதை செலுத்தி சென்றுள்ளார்.

நெல்லூரில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தன் தந்தைக்கு சிலை அமைத்தார். அப்போது, கோனேட்டம்பேட்டை கிராம மக்களை தனி வாகனத்தில் நெல்லூருக்கு அழைத்து சென்று சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க வைத்து அன்பு காட்டினார். இந்த கிராமத்திலுள்ள சிறிய விநாயகர் கோயிலில்தான் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பெற்றோர் திருமணம் நடைபெற்றது. தற்போது வரை எஸ்.பி பாலசுப்ரமணியம் குடும்பத்தினர்தான் இந்த கோயிலை பராமரித்து வருகின்றனர்.கடந்த 2018 - ஆம் ஆண்டு எஸ்.பி. பி கடைசியாக கோனேட்டம்பேட்டை கிராமத்துக்கு சென்றார். அப்போது, கிராமத்தினருக்கு குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் வசதியை மேம்படுத்தி கொடுத்தார் எஸ்.பி.பி.

வாழ்க்கையில் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் பிறந்த ஊரையும் வளர்ந்த ஊரையும் மறக்க கூடாது என்று அடிக்கடி எஸ்.பி.பி. சொல்வது உண்டு. சொன்னது போல வாழ்ந்தும் காட்டினார் பாடும் நிலா.

இப்போது, எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவால் கலங்கி நிற்கிறது கோனேட்டம்பேட்டை கிராமம்!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments