யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வேட்டைக்காரன்ஸ்..! கைதியான பரிதாபம்

0 4565
யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வேட்டைக்காரன்ஸ்..! கைதியான பரிதாபம்

கடலூரில் துப்பாக்கி தயாரித்த வேட்டைக்காரர்கள் இருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யூடியூப் பார்த்து சப்பாத்தி சுட்ட காலம் போய், துப்பாக்கி தயாரித்து குருவி சுடத் திட்டமிட்டவர்கள் கைதியான பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

யூடியூப் வீடியோ பார்த்து சமையல் செய்ய கற்றுக்கொண்டு வீட்டில் உள்ளோருக்கு விதவிதமான உணவுப் பதார்த்தங்களை செய்து கொடுத்து அசத்தியவர்களைப் பார்த்திருக்கிறோம்..!

அந்த வகையில் யூடியூப்பை பார்த்து கூட்டாளிக்கு துப்பாக்கி செய்ய கற்றுக் கொடுத்து குருவி சுட முயன்ற இருவர் போலீசில் சிக்கி உள்ளனர்..!

கடலூர் மாவட்டம் குமாரப்பேட்டையைச் சேர்ந்த ஆறுமுகம், திருமானிக்குழி சங்கர் ஆகிய இருவரும் நண்பர்கள். இவர்கள் யூடியூப்பில் புதுப் புது வீடியோக்களைப் பார்த்து பொழுதுபோக்குவது வழக்கம். அந்தவகையில் "ஹவ் டு மேக் கன்ட்ரி மேடு ரைஃபில்...?" என்று யூடியூப்பில் தேடியுள்ளனர். அப்போது வந்த துப்பாக்கி வீடியோ ஒன்றைப் பார்த்து வேட்டைத் துப்பாக்கி செய்யத் தொடங்கியுள்ளனர்.

மரத்தை எடுத்து வளவளப்பாக இழைத்து, இரும்புக் குழாயை எடுத்து அதில் பொருத்தத் தேவையான விசை வரைக்கும் கடைகடையாக அலைந்து திரிந்து வாங்கியுள்ளனர். இவர்களது திடீர் நடவடிக்கையால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, திருப்பாதிரிப் புலியூர் காவல் ஆய்வாளர் குணசேகரன் ரகசியமாக இவர்களது வீட்டுக்குச் சென்று சோதனையிட்டபோது, முக்கால் பாகம் தயாரான நிலையில் வேட்டைத் துப்பாக்கியின் பாகங்கள் சிக்கின. வீட்டில் செல்போனில் யூடியூபைப் பார்த்து துப்பாக்கி தயாரித்துக் கொண்டிருந்த ஆறுமுகம்- சங்கர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் துப்பாக்கி செய்து காக்கா குருவிகளை வேட்டையாடத் திட்டமிட்டிருந்ததாகவும், தாங்கள் வேட்டையைத் தொடங்கும் முன்பாக, போலீசார் வேட்டையைத் தொடங்கி விட்டதால் தாங்கள் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவித்தனர்.

குருவியை வேட்டையாட நினைத்து துப்பாக்கி தயாரித்த இருவரும் கடலூர் சிறையில் கைதியாகி கம்பி எண்ணி வருகின்றனர்.

விவகாரமான வீடியோக்களைப் பார்த்துவிட்டு, அது போலவே செய்முறைப் பயிற்சியில் ஈடுபட்டால் கிளைமாக்ஸில் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்குச் சாட்சியாக மாறி இருக்கின்றது இந்த கைது சம்பவம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments