ஹிந்தி தெரியாததால் லோன் வாங்க முடியாத நிலை- ஜெயங்கொண்டத்தில் டாக்டருக்கு நேர்ந்த பரிதாபம்

0 6919

 ஜெயங்கொண்டத்தில் ஹிந்தி தெரியவில்லை என்றால் லோன் தரமாட்டேன் என்று ஓய்வுபெற்ற மருத்துவருக்கு கடன் இல்லை என விண்ணப்பத்தை நிரகாரித்த வங்கி மேலாளரிடத்தில் மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மருத்துவத்துறையில் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் பாலசுப்ரமணியத்துக்கு சொந்தமாக நிலம் , வீடுகள் ஆகியவை உள்ளன.ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்த பாலசுப்ரமணியம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லோன் கேட்டு சென்றுள்ளார். இந்த வங்கியில்தான் பாலசுப்ரமணியம் கணக்கும் வைத்துள்ளார்.

வங்கியில் தற்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால் காம்ப்ளே என்பவர் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். அவரிடத்தில் சென்ற பாலசுப்பிரமணியன் தனது இடம் சம்பந்தமான ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள் மற்றும் வருமான வரி செலுத்தும் படிவம் ஆகியவற்றை காண்பித்து கடன் தேவை குறித்து பேசியுள்ளார்.

பிறகு நடந்த சம்பவங்கள் குறித்து பாலசுப்ரமணியம் கூறியதாவது, ''என்னிடத்தில் பேசிய வங்கி மேலாளர்விஷால் காம்ப்ளே , "Do u know Hindi" என ஆங்கிலத்தில் கேட்டார், அதற்கு நான் "I don't know Hindi, but i know Tamil and English" என ஆங்கிலத்தில் கூறினேன். அதற்கு பதிலளித்த வங்கி மேலளார் "I am from Maharashtra, I know Hindi. Language problem" என திருப்பி கூறினார். மருத்துவர் மீண்டும் கடன் தொடர்பாக பேசிய போது, வங்கி மேலாளர் மீண்டும் மீண்டும் மொழிபிரச்னை பற்றியே என்னிடம் பேசினார். கடன் சம்பந்தமான ஆவணங்களையே பார்க்காமல் கடன் கொடுக்க இயலாது என நிராகரித்தார்'' என்று தெரிவித்துள்ளார். 

மேலும், தமிழகத்தில் வாழும் நான் இந்தி தெரியாத காரணத்தினால் என்னால் வங்கியில் லோன் பெற முடியவில்லை என்றும் டாக்டர். பாலசுப்ரமணியம் வருத்தத்துடன் கூறினார். தற்போது டாக்டர். பாலசுப்ரமணியம் மொழி பிரச்சனை காரணமாக அடிப்படை உரிமையை மறுத்து கடன் தர மறுத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறி வங்கி மேலாளர் விஷால் கம்ப்ளேவுக்கு  நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வங்கி மேலாளர் விஷால் காம்ப்ளேவிடத்தில் தொலைபேசி வாயிலாக விளக்கம் கேட்ட போது, 'என்னிடத்தில் நிறைய பேர் லோன் கேட்டு வருகிறார்கள். இப்படி, ஒரு சம்பவம் நடந்ததாக எனக்கு நினைவில்லை' என்று குற்றச்சாட்டை மறுத்துள்ளார். 

இது தொடர்பான புகாரை அடுத்து வங்கி மேலாளரை திருச்சி மண்டல அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்து வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments