சமுத்திரம் ஏரியில் டெலிபோன் சாமியார் கட்டிய கோவில் இடிப்பு..! மன்னர் காலத்து ஏரி குளமானது

0 7559

தஞ்சாவூரில் மன்னர் காலத்தில் வெட்டப்பட்ட ஏரியை ஆக்கிரமித்து 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரமாண்ட லிங்கத்துடன் கூடிய ஆதிமாரியம்மன் கோவில் பொதுப்பணித்துறையினரால் இடித்து அகற்றப்பட்டுள்ளது. ராணிக்காக சமுத்திரம் போல் வெட்டப்பட்ட ஏரியை ஆக்கிரமித்து கோவில் கட்டி குடித்தனம் நடத்திய டெலிபோன் சுவாமிகளின் கோவில் இடிக்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

தஞ்சாவூரை சரபோஜி மன்னர்கள் ஆண்டகாலத்தில் அரண்மனையில் இருந்து சமுத்திரத்தை காண ஆசைப்பட்ட ராணியாரின் ஆசையை நிறைவேற்ற சமுத்திரம் போல மிகப்பிரமாண்டமாக வெட்டப்பட்டது சமுத்திரம் ஏரி..!

இந்த ஏரி காலபோக்கில் ஆக்கிரமிப்பாளர்களால் கட்டிடங்கள் கட்டப்பட்டு சுருங்கி, சுருங்கி குளம் போல காட்சி அளிக்கும் நிலைமை ஏற்பட்டது. கடந்த 25 வருடத்திற்கு முன்பு டெலிபோன் சாமியார் என்று அழைக்கப்பட்ட ராமமூர்த்தி சுவாமிகள் என்பவர் வடவாறு ரெயில்வே கேட் அருகே சமுத்திரம் ஏரியை ஆக்கிரமித்து 14 ஆயிரம் சதுரடியில் ஆதிமாரியம்மன் கோவிலை கட்டியுள்ளார்.

தர்ப்பை புல்லை காதில் டெலிபோன் போல வைத்துக் கொண்டு நேரடியாக அம்பாளிடம் பேசுவதாக கூறி பக்தர்களை சேர்த்தவர் இவர். இதன் தொடர்ச்சியாக கோவிலையொட்டி 70 வீடுகளும் ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இராமமூர்த்தி சாமிகள் உயிரிழந்த பின்னர் அவரது உடலையும் கோவிலுக்குள் புதைத்து அவருக்கும் கோவிலுக்குள் சிலை வைத்ததால் இந்த கோவில் சமாதி கோவிலானது.

அவருக்கு பின்னர் அவரது மனைவி பார்வதி என்பவர் அந்த கோவிலை நிர்வாகித்து வந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பு கோவிலை பொதுப்பணித்துறையினர் அகற்ற முயன்ற போது பார்வதி நீதிமன்றத்தில் தடையாணை கோரியதாக கூறப்படுகின்றது.

இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம், 10 வார காலத்திற்குள் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த 3 தினங்களாக கோவிலை பொக்லைன் கொண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடித்து அகற்றிவருகின்றனர்.

இதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் நீதிமன்ற உத்தரவு என்பதால் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 70 வீடுகளையும், டெலிபோன் சாமியாரின் சமாதி கோவிலையும் பொதுப்பணித்துறையினர் இடித்து அகற்றும் பணியை இரவு பகலாக மேற்க்கொண்டு வருகின்றனர்

இந்த கோவில் போல பல்வேறு இடங்களில் அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள பிற மத ஆலயங்களையும் இடித்து அகற்ற வேண்டும் என்று இந்து அமைப்பினர் கோரிக்கைவிடுத்தனர்.

25 வருடங்களுக்கு முன்பு ஏரியை ஆக்கிரமித்து குடிசை போட கம்பு நட்டிய போதே பொதுப்பணித்துறையினர் விழிப்போடு செயல்பட்டு அதனை அகற்றி இருந்தால் நீதிமன்றம் விசாரணை என இவ்வளவு ஆண்டுகால சட்டபோராட்டம் நடத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என சுட்டிக்காட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அதே நேரத்தில் வருகின்ற மழைகாலத்திற்கு முன்பாக அனைத்து ஏரி, கால்வாய் ஆக்கிரமிப்புகளையும் முழுமையாக அகற்ற விரைவாக நடிவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments