இளைஞர் கொலைவழக்கில் தொடர்புடைய.. காவல் ஆய்வாளர் இடமாற்றம்..!

0 2492

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடத்தில் இளைஞர் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட இளைஞரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் இரண்டாம் நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த செல்வனுக்கும் அதிமுக பிரமுகரான திருமணவேலுக்கும் நிலத்தகராறு இருந்துள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில், தட்டார்மடம் காவல்துறையினர் எதிர்த்தரப்புக்குச் சாதகமாகச் செயல்பட்டு வந்ததாக செல்வம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் செல்வனை காரில் கடத்திய கும்பல் அவரை அடித்துக் கொன்று கடக்குளம் என்னுமிடத்தில் உடலைப் போட்டுவிட்டுச் சென்றது.

தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனின் தூண்டுதலாலேயே செல்வன் கொல்லப்பட்டதாகவும், அவரைக் கைது செய்யும் வரை உடலை வாங்க முடியாது எனவும் கூறிச் செல்வத்தின் உறவினர்கள் நேற்றுத் திசையன்விளை காவல்நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திசையன்விளை காவல் நிலையத்தில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட 6 பேர் மீது ஆட்கடத்தல், கொலை உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்து தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் 3 பேரை திசையன்விளை காவல்துறையினர் கைது செய்து மூன்றடைப்பு காவல்நிலையத்துக்குக் கொண்டுசென்றனர். அவர்களிடம் கொலைக்கான காரணம், அதற்குத் தூண்டியவர்கள் யார் என்பன குறித்து நான்குநேரி காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

செல்வனைக் கடத்திச் செல்லப் பயன்படுத்திய காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனிடையே கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனைக் கைது செய்யும் வரை உடலை வாங்க முடியாது எனக் கூறிச் செல்வனின் உறவினர்கள் இரண்டாம் நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments