பீகாரில் கோசி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ரயில் பாலம் நாட்டுக்கு அர்ப்பணிப்பு..

பீகாரில் கோசி ஆற்றில் ரயில் பாலம் உட்படப் பல்வேறு ரயில்வே திட்டங்களின் பயன்பாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
பீகாரில் கோசி ஆற்றின் மீது 516 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 2 கிலோமீட்டர் நீளமுள்ள ரயில்வே பாலத்தைப் பிரதமர் மோடி காணொலியில் திறந்து வைத்தார். இதேபோல் பரவுணி மின்சார ரயில் எஞ்சின் பணிமனை, மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகள், புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதைகள் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார். பல்வேறு வழித்தடங்களில் ரயில் போக்குவரத்தையும் தொடங்கி வைத்தார்.
காணொலியில் பேசிய மோடி, பீகாரில் மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைச் செயல்படுத்தியதால் கிழக்கிந்தியாவின் ரயில்வே கட்டமைப்பு வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
புதிய இந்தியாவின் எண்ணங்கள், தற்சார்பு இந்தியாவின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றுக்கு ஏற்றபடி ரயில்வே துறையை உருவாக்கக் கடந்த ஆறாண்டுகளாக முயற்சிகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
Comments