பிரதமர் குறிப்பிட்ட 15 லட்சத்தில் முதல் கட்டமாக ரூ. 25,000... மாரியம்மன் இந்தியன் வங்கி அதிகாரிகள் அட்டூழியம்!

0 17180

ன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில், பிரதமர் மோடி கூறியபடி சுவிஸ் வங்கியில் மீட்கப்பட்ட கருப்பு பணத்தில் முதல் கட்டமாக ரூ. 25,000 கணக்கில் செலுத்துவதாக வங்கிக்கணக்கு கேட்கும் போலி வங்கி அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் உவைஸ். இவர் 10 ஆண்டுகள் பத்மநாபபுரம் நகராட்சி கவுன்சிலராக இருந்துள்ளார். சில தினங்களுக்கு முன் அவருக்கு செல்போன் அழைப்பு வந்தது. மறு முனையில் பேசிய நபர் தன்னை வங்கி அதிகாரி எனக் கூறி அறிமுகமாகியுள்ளார். பிறகு, பிரதமர் மோடி கூறியபடி, சுவிஸ் வங்கியில் மீட்கப்பட்ட கருப்பு பணம் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதிலிருந்து உங்கள் வங்கிக் கணக்குக்கு படிப்படியாக ரூ. 15 லட்சம் போடப்படும். முதல் கட்டமாக 25,000 உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். எனவே, உங்கள் வங்கிக்கணக்கை தருமாறு கேட்டுள்ளனர்.

இதற்குப் பதிலளித்த உவைஸ், எனக்கு மையவாடி வங்கியில்தான் கணக்கு உள்ளது என்று கேலியாக பதிலளித்துள்ளார். மையவாடி என்றால் மயானம் என்று அர்த்தம். இது தெரியாத அந்த போலி வங்கி அதிகாரி, மையவாடி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிதானே என்று திருப்பிக் கேட்டுள்ளார்.  கேலியாகவும்  பிடிகொடுக்காமலும் உவைஸ்  பேசியதால் சுதாரித்துக் கொண்ட போலி வங்கி அதிகாரி போன் இணைப்பைத் துண்டித்துக் கொண்டு ஓடி விட்டார். தன்னிடம் பேசிய செல்போன் எண்ணுக்கு உவைஸ் மீண்டும் போன் செய்த போது அவர் போனை எடுக்கவில்லை. தற்போது, உவைசுடன் போலி வங்கி அதிகாரியின் தொலைபேசி உரையாடல் சமூகவலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

அதே போல, மணிகண்டன் என்பவரது போனுக்கும், பெண் ஒருவர் போன் செய்துள்ளார்.  போனை எடுத்துப் பேசிய மணிகண்டனின் மனைவியிடம்  தன்னை ஒரு அமைப்பின் நிர்வாகி எனக்கூறி  பிரதமர் அறிவித்தபடி சுவிஸ் வங்கியிலிருந்து மீட்கப்பட்ட கருப்பு பணத்தில் ரூ. 15 லட்சம் மக்களுக்கு பிரித்துத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் தவணையாக ரூ. 35 ஆயிரம்  உங்கள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படவுள்ளது. எனவே வங்கிக்கணக்கு தரவும் என்று கேட்டுள்ளார். சுதாரித்துக் கொண்ட மணிகண்டனின் மனைவி அந்த  பெண்ணை தாறுமாறாக திட்டிவிட,  அவர் போனை வைத்து விட்டார். தக்கலை பகுதியில் இது போன்று பலருக்கும் போன் வருவதாக பரவலாக புகார் எழுந்துள்ளது. 

இது தொடர்பாக, முன்னாள் கவுன்சிலர் உவைஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், '' கன்னியாகுமரி மாவட்டத்தில்  இதே போன்று போலி அதிகாரிகள் கிராம மக்களை ஏமாற்றி அவர்களது வங்கி கணக்கில் இருந்து ஆயிரக்கணக்கான ரூபாய் மோசடி செய்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவல் துறைக்கு புகார் அளித்தும் பலனில்லை. இது போன்ற நபர்களைக் கண்டுபிடிக்க முடியாது என போலீசார் கூறியதாக குற்றம் சாட்டியுள்ளார். 

திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு மாரியம்மன் இந்தியன் வங்கி என்று காமெடியாக குறிப்பிடுவார். அது போல, கன்னியாகுமரி மாவட்டத்தில் போலி வங்கி அதிகாரிகள் பரவி மக்கள் பணத்தை பறிக்க முயன்று வருகின்றனர். எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments