’அலைபாயுதே’ திருமணம் ’ஜோடி’ க்ளைமேக்ஸ்..! புது மாப்பிள்ளைக்கு பல்பு

0 51282

கன்னியாகுமரி அடுத்த மார்த்தாண்டத்தில் மணப்பெண் அலங்காரத்திலிருந்த செவிலியரின் திருமணத்தை தடுத்து நிறுத்திய இளைஞர் ஒருவர், காவல்துறையினரின் உதவியுடன் தனது காதல் மனைவியை மீட்டுச்சென்றார். அலைபாயுதே பாணியில் மணம் முடித்த பெண்ணால் ஏற்பட்ட குழப்பம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே வெட்டுவெண்ணி பகுதியை சேர்ந்த 23 வயதான ஷாமிலி என்பவர் பிஎஸ்சி நர்சிங் முடித்து விட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார்.

ஷாமிலிக்கும் , அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் பெற்றோர் ஏற்பாட்டின்படி 14 ந்தேதி திருமணம் செய்வதாக நிச்சயித்து அதற்கான திருமண வரவேற்பு நிகழ்ச்சி 13 ந்தேதி மாலை நடந்தது. மணமகனின் அருகில் மணப்பெண் அலங்காரத்தில் ஷாமிலி வந்து நிற்க இரு வீட்டு உறவினர்களும் வாழ்த்திக் கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு மகளிர் போலீசுடன் மேடையேறிய இளைஞர் ஒருவர், ஷாமிலியை தனது மனைவி என்றும் தங்களுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துவிட்ட நிலையில் தற்போது கட்டாய திருமணம் நடப்பதாகவும் தெரிவித்தார். இதனால் திருமணம் வீட்டில் சல சலப்பு ஏற்பட்டது. மறுநாள் தாலி கட்டும் மகிழ்ச்சியில் இருந்த புதுமாப்பிள்ளை அதிர்ச்சியில் உறைந்து போக,மணப்பெண்ணோடு பெண் வீட்டாரை காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். ஷாமிலியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ‘அலைபாயுதே’ காதல் திருமணம் வெளிச்சத்திற்கு வந்தது. 

ஷாமிலி கல்லூரியில் உடன் படித்த தர்மபுரியை சேர்ந்த ராஜு என்பவரை காதலித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் வீட்டில் தோழியின் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள செல்வதாக கூறி விட்டு தர்மபுரி சென்ற ஷாமிலி, காதலன் ராஜுவை ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் அலைபாயுதே திரைப்பட பாணியில் பிரிந்து அவரவர் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்த இந்த காதல் திருமண ஜோடியை, கடந்த மார்ச் மாதம் முதல் அமுல்படுத்தபட்ட ஊரடங்கு தற்காலிகமாக பிரித்துள்ளது. இருவராலும் நேரில் சந்திக்க முடியாமல் செல்போனில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இதனிடையே ஷாமிலிக்கு அவரது பெற்றோர், கிராத்தூர் பகுதியை சேர்ந்த இளைஞருடன் திருமணம் பேசி முடித்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்த ராஜூ தனது காதல் மனைவியை மீட்பதற்கு பலமுறை இ - பாஸ் பெற முயற்சித்தும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

ஷாமிலியோ தனது காதல் திருமணம் குறித்து பெற்றோரிடம் சொல்ல அஞ்சியுள்ளார். இந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து காதலியின் முகவரியை தேடிப்பிடித்து ஒரு வழியாக 13ந்தேதி குழித்துறை மகளிர் காவல்நிலையத்தின் உதவியை நாடியுள்ளார் ராஜூ.

ஷாமிலி காதல் கணவரோடு செல்வதற்கே உறுதியாக இருந்ததாலும், இருவரும் மேஜர் என்பதாலும், அவரை காதல் கணவருடன் போலீசார் தர்மபுரிக்கு அனுப்பி வைத்தனர்.

பெற்றோருக்கு தெரியாமல் அறிமுகம் இல்லா நபரை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் உள்ள பெண்கள், வீட்டில் காதலை சொல்லாமல் மவுனமாக இருந்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments