மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நிறைவு..!

0 4755
நாடு முழுவதும் இன்று நடைபெற்ற நீட் தேர்வில் சுமார் 16 லட்சம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தேர்வெழுதினர்.

நாடு முழுவதும் இன்று நடைபெற்ற நீட் தேர்வில் சுமார் 16 லட்சம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தேர்வெழுதினர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மே மாதம்  நடக்கவிருந்த நீட் தேர்வு  ஒத்தி வைக்கப்பட்டு  இன்று நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் 3,842 மையங்களில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் எழுதினர். தமிழகத்தில் 238 மையங்களில் சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் பேர் தேர்வெழுதினர்.  சென்னையில் 45 மையங்களில்  22,500 பேர் நீட் தேர்வு எழுதினர்.

முன்னதாக, கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக தேர்வு மையத்துக்கு வந்த மாணவ -மாணவியரின் உடல்வெப்ப அளவு பரிசோதிக்கப்பட்டதுடன், முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வசதியும் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து சமூக இடைவெளியுடன் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க ஹால்டிக்கெட், அடையாள அட்டை உள்ளிட்டவை தீவிரமாக பரிசோதிக்கப்பட்ட பிறகே மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு அறைக்கு உள்ளேயே பேனா வழங்கப்படும் என்பதால் பேனா எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை.

சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள ஆசான் நினைவு முதுநிலைபள்ளியில் உள்ள நீட் தேர்வு மையத்தில் தேர்வு நடைபெற்றது. அப்போது நடத்தப்பட்ட சோதனையின்போது துப்பட்டா, காதணி அணிந்திருந்தோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவற்றை கழற்றிக் கொடுத்துவிட்டு மாணவிகள் வந்தபிறகே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள மையத்தில் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த வாசுதேவனின் மனைவி முத்துலட்சுமி தேர்வு எழுதவந்தார். திருமணமாகி 4 மாதங்களே ஆகும் நிலையில், தேர்வு மையத்துக்குள் நகைகள் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததால், கழுத்திலிருந்த தாலி சங்கிலி, காலில் அணிந்திருந்த மெட்டி, தலையில் வைத்திருந்த பூ ஆகியவற்றை குடும்பத்தினரிடம் கழற்றி கொடுத்து விட்டு சென்றார்.

மதியம் 2 மணிக்கு தொடங்கிய தேர்வுக்கு காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மாணவ- மாணவியர் வர அனுமதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 1.30 மணிக்கு தேர்வு மைய நுழைவாயில்கள் அடைக்கப்பட்டு பூட்டு போட்டு மூடப்பட்டது. அதன்பிறகு யாருக்கும் அனுமதியளிக்கப்படவில்லை.முன்னெச்சரிக்கையாக உடல் வெப்பம் 99.4 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் உள்ள மாணவர்கள் தனி அறையில் அமர வைக்கப்பட்டு 'நீட்' தேர்வு எழுதினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments