இயந்திரங்களின் உதவியுடன்.. வேளாண்மைப் பணிகள்..!

0 6940
வேளாண் பணிகளுக்குக் கூலியாட்கள் கிடைக்காத நிலையில், நவீன இயந்திரங்களின் உதவியுடன் பணிகளை விரைந்து முடிக்கவும், செலவைக் குறைக்கவும் முடியும் என விவசாயிகளும் வேளாண்துறை அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்...

வேளாண் பணிகளுக்குக் கூலியாட்கள் கிடைக்காத நிலையில், நவீன இயந்திரங்களின் உதவியுடன் பணிகளை விரைந்து முடிக்கவும், செலவைக் குறைக்கவும் முடியும் என விவசாயிகளும் வேளாண்துறை அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்....

மாடுகளில் ஏர்பூட்டி உழுதது, ஆட்களே கைகளால் நாற்றுக்களைப் பிடுங்கி நட்டது, களைபறித்தது, பன்னரிவாள் கொண்டு கதிர்களை அறுத்துக் கட்டிக் கால்நடையாகத் தலையில் சுமந்து கொண்டு சென்று களத்தில் சேர்த்தது, கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைத் தூற்றிப் பிரித்தெடுத்தது, வைக்கோலைக் காயப்போட்டுக் கட்டுகளாகக் கட்டியது என நெல் பயிரிடலில் அத்தனை வேலைகளையும் ஆட்களைக் கொண்டே செய்தது ஒரு காலம்.

காவிரிப் பாசன மாவட்டங்களில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை வேளாண் பணிகளில் விவசாயத் தொழிலாளர்களே அதிக அளவில் ஈடுபட்டு வந்தனர். கடந்த பல ஆண்டுகளாக வறட்சியால் வேளாண் பணிகள் பாதிக்கப்பட்டதால் தொழிலாளர்கள் வேலைவாய்ப்புத் தேடி நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்தனர். இதனால் நடவு, களை பறித்தல் ஆகிய பணிகளுக்குக் கூலியாட்கள் போதிய எண்ணிக்கையில் கிடைப்பதில்லை.

ஏற்கெனவே உழவுப் பணிக்கு டிராக்டரும், அறுவடைப் பணிக்கு எந்திரமும் தமிழகத்தில் பெருமளவு பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் இயந்திரம் மூலம் நேரடியாக நெல் விதைத்தல், பாய்நாற்றங்கால் தயாரித்து இளம் நாற்றுகளை இயந்திரம் மூலம் நடவு செய்தல் ஆகியவற்றால் ஆள்பற்றாக்குறை தீர்வதுடன் செலவும் குறைகிறது. இயந்திரம் மூலம் நாற்றுக்களை வரிசை நடவு செய்வதால் கோனோவீடர் மூலம் எளிதாகக் களை எடுக்கவும் முடிகிறது.

ஆட்களைக் கொண்டு நெற்பயிரை அறுவடை செய்ய ஒரு நாள் முழுதும் ஆகும். இதனால் பெருமளவில் நெல் பயிரிடும் இடங்களில் அறுவடைப் பணிகள் ஒரு மாதத்துக்கு மேல் நீடித்தது. ஒரு ஏக்கரில் பயிரிட்டுள்ள நெற்பயிரை எந்திரம் மூலம் ஒரு மணி நேரத்தில் அறுவடை செய்யலாம் என்பதால், ஓரிரு வாரங்களில் அறுவடைப் பணிகள் முடிகின்றன. வைக்கோலைச் சுருட்டிக் கட்டவும் இயந்திரம் வந்துள்ளது.

உழவு, நெல் விதைப்பு, நடவு, அறுவடை, வைக்கோல் கட்டுதல் என நெல் பயிரிடலின் பெரும்பாலான பணிகள் இயந்திர மயமாக்கப்பட்டுள்ளது. 95 விழுக்காடு அறுவடைப் பணிகள் இயந்திரம் மூலமே நடைபெறுகின்றன. இதனால் 8 ஆண்டுகளுக்குப் பிறகு குறித்த இலக்கை விட அதிகப் பரப்பில் நெல் பயிரிடப்பட்டு அதிக விளைச்சலும் கிடைத்துள்ளது.

நெல் பயிரிடலில் பெரும்பாலான பணிகள் இயந்திரமயமாக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வகை எந்திரங்களைச் சிறு குறு விவசாயிகளால் இவற்றை விலைக்கு வாங்கிப் பயன்படுத்த முடியாது என்பதால் மானிய விலையிலும், வாடகைக்கும் கிடைக்க வகைசெய்தால் வேளாண்மையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments