சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு பெற்ற முதல் பாலிவுட் நட்சத்திரம் கங்கணா... முகேஷ் அம்பானி போல கட்டணம் செலுத்துவாரா?

0 11275

சிவசேனாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பாலிவுட் நடிகை கங்கணா ராவத்துக்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் வழங்கும் ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் இதற்கு முன் எந்த நடிகர்- நடிகைக்கும் இத்தகைய பாதுகாப்பு வழங்கப்பட்டதில்லை. அமிதாப்பச்சனுக்கு கூட மும்பை போலீஸ்தான் பாதுகாப்பு வழங்கி வருகிறது. சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத்தின் அடாவடியான பேச்சு காரணமாக சி.ஆர்.பி.எப் வீரர்களின் பாதுகாப்பை பெற்ற முதல் பாலிவுட் நட்சத்திரம் என்ற பெருமை கங்காணாவுக்கு கிடைத்துள்ளது. உள்துறை அமைச்கத்தின் கீழ் இயங்கி வரும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி பாப்டே , உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகக் பகவத், பாரதிய ஜனதா எம்.பி. சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்ட 60 முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது. தற்போது, கங்கணாவும் அதில் ஒருவர்.

கிட்டத்தட்ட 35 படங்களில் நடித்துள்ள கங்கணா ராவத், படம் ஒன்றுக்கு  10 முதல் 12 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார். இவருக்கு வழங்கப்பட்ட ஒய் பிளஸ் பாதுகாப்பின்படி, கங்கணாவின் இரு பக்கங்களிலும் துப்பாக்கி ஏந்திய தனி பாதுகாப்பு அதிகாரிகளுடன் 11 சி.ஆர்.பி.எப் வீரர்கள் இணைந்து செயல்படுவார்கள். உள்ளுர் போலீஸ் எப்போதும் தொடர்பில் இருப்பார்கள். பொதுவாக, வி.ஐ.பி.க்களின் பாதுகாப்புக்காக மத்திய, மாநில அரசுகளே செலவழிக்கின்றன. வி.ஐ.பி.க்கள் பாதுகாப்புக்காக மட்டும் ஆண்டுக்கு ரூ. 26,000 கோடி செலவு செய்யப்படுகிறது. சி.ஆர்.பி.எப் அமைப்பில் உள்ள 7.6 சதவிகித வீரர்கள் வி.ஐ.பி.க்களின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. image

சில தொழிலதிபர்கள் தங்கள் சொந்த பணத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்களை பாதுகாப்புக்கு அமர்த்திக் கொள்வார்கள். ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானிக்கு  சி.ஆர்.பி.எப் வீரர்கள்தான் பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள். இதற்காக, மாதம் ரூ. 15 லட்சம் மத்திய அரசுக்கு முகேஷ் அம்பானி செலுத்தி வருகிறார். ஆனால்,  கங்கணா ராவத்துக்கு மத்திய அரசே இந்த பாதுகாப்பை வழங்கியுள்ளது. அதனால்,கங்கணா ராவத் பணம் செலுத்துகிறாரா இல்லையா என்பது தெரியவில்லை.

சி.ஆர்.பி.எப் அமைப்பிலிருந்து எக்ஸ், ஒய், ஒய் பிளஸ், இசட், இசட் ப்ளஸ் ரக பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போன்ற வி.வி.ஐ.பி- க்களுக்கு தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்து. பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்தினருக்க எஸ்.பி.ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு அளிக்கிறார்கள். 

பொதுவாக , அரசுப்பணிகளில் உள்ளவர்கள், சமூகத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே சி.ஆர்.பி.எப் அமைப்பு பாதுகாப்பு வழங்கி வந்தது. தற்போது, சிவசனோ கைங்கர்யத்தால் கங்கணாவுக்கும் சி.ஆர்.பி.எப் அமைப்பின் பாதுகாப்பை பெற்று விட்டார். ஆனால், கங்கணா ராவத் அரசு அதிகாரியோ முக்கிய பிரமுகரோ அல்ல. அதனால், தன் பாதுகாப்புக்கான செலவை அவரே ஏற்றுக் கொள்வார் என்றே அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். 

இதற்கிடையே , கங்கணா ரணாவத் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், '' கடந்த ஜனவரி 15 - ஆம் தேதி கொரோனா பரவுவதற்கு முன் என் அலுவலகத்தை நான் திறந்தேன். தற்போது எல்லோரையும் போலவே நானும் வேலை இல்லாமல் பணம் இல்லாமல் இருக்கிறேன். எனவே, உத்தவ் தாக்கரே அரசால், உடைக்கப்பட்ட என் அலுவலகத்தை சீரமைக்கப் போவதில்லை. இடிபாடுகளிலிருந்து பணியாற்றுவேன். இந்த உலகத்தில் கேள்வி கேட்க விரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த நிலையின் அடையாளமாக என் அலுவலகம் இருக்கும் '' என்று கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments