அரசு பேருந்துக்கே இப்படி ஒரு நிலைமையா... டோல் கேட்டில் அனுமதி இல்லை

0 53958
அரசு பேருந்துக்கே இப்படி ஒரு நிலைமையா... டோல் கேட்டில் அனுமதி இல்லை

திருவண்ணாமலையில் இருந்து பயணிகளுடன் ஓசூர் புறப்பட்ட அரசுப் பேருந்திற்கு, சுங்கச்சாவடி பாஸ் வழங்காததால்,  கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் அனுமதி மறுக்கப்பட்டு பேருந்து திருப்பி அனுப்பப்பட்டது. 

விழுப்புரம் கோட்டத்திற்குச் சொந்தமான அரசுப் பேருந்து ஒன்று, திருவண்ணாமலையில் இருந்து பயணிகள் சிலருடன் ஓசூர் புறப்பட்டுச்சென்றது.

பேருந்து கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியைக் கடக்க முயன்றபோது அரசுப் பேருந்துகளுக்கு வழக்கமாக வழங்கப்பட வேண்டிய சுங்கச் சாவடி பாஸ், அந்த பேருந்துக்கு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

பேருந்தில் குறைந்த அளவிலேயே பயணிகளே இருந்ததால் நடத்துனரிடமும் சுங்கக் கட்டணத்திற்கான பணம் இல்லை. தவிர, நடத்துனர் நேரடியாக சுங்க கட்டணம் செலுத்த அனுமதியில்லை என்றும் கூறப்படுகின்றது. எனவே என்ன செய்வதென்று தெரியாமல் பேருந்து ஓட்டுனர் தவிக்க, சுங்கச்சாவடி ஊழியர்களோ பேருந்தை அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பினர். இதையடுத்து ஓசூருக்கு செல்ல வேண்டிய பயணிகள் நடுவழியில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அந்தப் பேருந்திற்கு பதிலாக சுங்கபாஸ் உள்ள மாற்று பேருந்தை அனுப்பி வைத்து அதில் பயணிகளை ஏற்றி ஓசூருக்கு அனுப்பி வைத்துவிட்டு , சுங்க கட்டணம் செலுத்த இயலாமல் தவித்த பேருந்தை மீண்டும் திருவண்ணாமலைக்கே திரும்ப உத்தரவிட்டனர்..!

மாற்று பேருந்துக்கு செலவழித்த டீசலுக்கு 5 முறை சுங்கக் கட்டணம் செலுத்தி விடலாம் என்று தலையில் அடித்துக் கொண்டே பயணம் மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர் பயணிகள்..!

இது குறித்து விளக்கம் அளித்துள்ள விழுப்புரம் போக்குவரத்து கழக அதிகாரிகள், ஓசூருக்கு 10 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதால் அவற்றிற்கு மட்டுமே கட்டணம் செலுத்தி பாஸ் எடுத்திருந்ததாகவும், கூடுதல் பேருந்து என்பதால் டோல்கேட் பாஸ் இல்லை என்றும், இனி வரும் காலங்களில் நடத்துனரே சுங்கக் கட்டணம் எடுத்துச்செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

சுங்கச் சாவடிகளே தேவையில்லை என்று மக்கள் ஆதங்கப்படும் நிலையில் முதற்கட்டமாக குறைந்தபட்சம் அரசு பேருந்துகளுக்காவது சுங்கக் கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளித்து, பயணிகள் கட்டணத்தில் சலுகை வழங்கினால் இது போன்ற தவிப்புகள் நேராது.

அதே நேரத்தில் பழுதான பேருந்துகளுக்கு பதில் மாற்றுப் பேருந்து என்றால் கூட ஏற்புடையதாகஇருக்கும், சுங்க கட்டணத்திற்கு எல்லாம் மாற்றுப் பேருந்து வரவேண்டும் என்பதெல்லாம் பயணிகளின் நேரத்தை விரயமாக்கும் செயல்..! என்கின்றனர் தவிப்புக்குள்ளானவர்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments