"இந்திய தரப்பு துப்பாக்கியால் சுட்டதாக சீனா கூறுவது பொய்" - இந்திய ராணுவம்

0 2097

கிழக்கு லடாக் எல்லையில், இந்திய நிலைகளை நெருங்கி வர முயன்ற சீனப் படையினர், வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திவிட்டு, இந்திய தரப்பு துப்பாக்கியால் சுட்டதாக கூறுவது பொய் என ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவம் அளித்துள்ள விளக்கத்தில், கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்தின்போது, சீனப் படையினர் இந்திய நிலைகளை நோக்கி நெருங்கி வர முயன்றதாகவும், இந்திய வீரர்கள் அந்த முயற்சியை தடுத்தபோது, அச்சுறுத்தும் வகையில் சீன வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் மோதல் போக்கை விலக்கிக் கொள்வது, பதற்றத்தை தணிப்பது என்பதில் உறுதியாக இருந்தபோதிலும், சீனா தரப்பு பதற்றத்தை அதிகரிக்கும் வேலைகளை செய்துவருவதாக இந்திய ராணுவம் குறிப்பிட்டுள்ளது. எந்த ஒரு நிலையிலும் இந்திய ராணுவம் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் அத்துமீறியது இல்லை என்றும், துப்பாக்கியால் சுடுவது உள்ளிட்ட ஆக்கிரமிப்பு செயல்களில் ஈடுபட்டதில்லை என்றும் இந்திய ராணுவம் கூறியுள்ளது.

சீன ராணுவமோ ஏற்கெனவே செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்களை மீறியும், ராணுவ மற்றும் அரசுபூர்வ பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டே எல்லை அத்துமீறல் முயற்சிகளிலும் ஈடுபடுவதை இந்திய ராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.

சீனா மிக மோசமான ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டபோதும் இந்திய வீரர்கள் கட்டுப்பாட்டுடனும், முதிர்ச்சியுடனும், பொறுப்புடனும் நடந்து கொண்டதாகவும் அமைதியைப் பேணும் அதேசமயத்தில் தேசத்தின் இறையாண்மையையும் எல்லைகளையும் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments