மாவட்டங்களிடையே பேருந்துப் போக்குவரத்து தொடங்கியது..!

0 2509
தமிழகத்தில் இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்துப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்துப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. 

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பொதுப் பேருந்துப் போக்குவரத்து தொடங்கியது. இ பாஸ் இன்றி மாநிலத்துக்குள் சொந்த வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்பட்டது. தமிழகத்துக்குள்ளேயே ஒரு மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்குப் பொதுப் பேருந்துப் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் காலையிலேயே புறப்பட்ட பேருந்துகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்து பயணிகளை இறக்கிவிட்டு மீண்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றன. முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பேருந்தில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. மூன்று பேர் அமரும் இருக்கைகளில் இரண்டு பயணிகள் மட்டுமே அமர அனுமதிக்கப்படுகிறது. பேருந்தில் ஏறும் முன்பு வெப்பநிலை காணும் சோதனை செய்யப்படுகிறது. அனைத்துப் பேருந்துகளிலும் கைகளைத் தூய்மை செய்யும் கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மண்டலத்துக்கு உட்பட்ட பணிமனைகளில் இருந்து பிற மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக 500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வருகைக்கு ஏற்பக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பேருந்தில் 35 பயணிகள் மட்டுமே அமர்ந்து பயணிக்க அனுமதிக்க வேண்டும் என நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மண்டலத்தில் உள்ள பணிமனைகளில் இருந்து 70 விழுக்காடு பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன. திருநெல்வேலி, ராமநாதபுரம், மதுரை, தேனி, கோவை, திருச்சி, விழுப்புரம், சென்னை ஆகிய நகரங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முகக் கவசம் அணிந்தால் மட்டுமே பயணிகள் பேருந்துகளில் ஏற அனுமதிக்கப்படுகிறது. 

கோவையில் இருந்து கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக 353 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் வருகை குறைவாகவே காணப்பட்டது. பயணிகளின் வருகைக்கு ஏற்பப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது. பேருந்துகளில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டுமே பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும் என நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் மாவட்டங்களிடையே பேருந்துப் போக்குவரத்து இன்று மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் கரூர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முதற்கட்டமாக 60 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், தேவைக்கேற்பக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் இன்று காலை முதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக 50 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெங்களூருக்குச் செல்லும் பேருந்துகள் ஓசூர் அருகே உள்ள அத்திப்பள்ளி வரையும், மாதேஸ்வரன் மலைக்குச் செல்லும் பேருந்துகள் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் வரையும் சென்று திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பொதுமக்களின் வசதிக்காகத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரைக் கோட்டப் பணிமனைகளில் இருந்து ஆயிரத்து 83 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மதுரையில் மாட்டுத்தாவணி ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கும், பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர்ப் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

திருப்பூர் மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு 180 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிற மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட பேருந்துகள் திருப்பூர் மாவட்டப் பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. முகக்கவசம் அணிந்த பயணிகளை மட்டுமே பேருந்துகளில் ஏற அனுமதிக்கவும், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டுமே பயணிகளை ஏற்றவும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் முதன்மையான நகரங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு ஐம்பது விழுக்காடு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் 10 விழுக்காட்டு அளவு இருக்கைகளே நிரம்பியுள்ளன. சென்னை, கோவை, வேளாங்கண்ணி உள்ளிட்ட நெடுந்தொலைவில் உள்ள நகரங்களுக்குச் செல்லும் பேருந்துகளின் போக்குவரத்து பிற்பகலுக்குப் பிறகு தொடங்குகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்குப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. 

திருச்சியில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 50 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இருந்து 45 பேருந்துகள் வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன. 54 இருக்கைகள் கொண்ட பேருந்துகளில் அதிகப்பட்சம் 30 பயணிகள் வரை மட்டுமே ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வருகை அதிகரித்தால் தேவைக்கேற்பக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாகப்பட்டினம் மண்டலத்துக்கு உட்பட்ட 11 பணிமனைகளில் இருந்து 321 பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன. நாகப்பட்டினத்தில் இருந்து சென்னை, பழனி,வேலூர், திருப்பூர், கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஓட்டுநர்கள் கற்பூரம் ஏற்றிப் பூஜை செய்த பின் பேருந்துகளை இயக்கினர். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments