பிரதமரின் கிசான் நிதி உதவி திட்டத்தில் நீளும் மோசடி.. வங்கிக் கணக்குகள் முடக்கம்..!

0 2725

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் நிதி உதவி திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 14 ஆயிரம் பேர் மோசடி செய்தது உறுதியான நிலையில், அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கி பணத்தை திரும்பப் பெறும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் நிதி உதவி திட்டத்தின் கீழ் கடந்த 2018 முதல், நலிவடைந்த விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆறாயிரம் ரூபாய் நிதியுதவியாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகள் போலி ஆவணங்கள் மூலம், மோசடியில் ஈடுபட்டு வருவதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மட்டுமே சுமார் 14 ஆயிரம் பேர், முறைகேடாக இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெற்று வந்தது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக வெளி மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரம் பேர் சேலத்தில் பதிவு செய்து முறைகேடாக நிதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மோசடியில் ஈடுபட்டவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, அதில் அரசு செலுத்திய பணத்தை திரும்பப் பெரும் பணி தொடங்கியுள்ளது.

சிபிசிஐடி போலீசார் 51 பேர் மீது அரசு பணத்தை முறைகேடாக கையாடல் செய்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் இரண்டு தனியார் கணினி சேவை மையங்களில், 160 பயனாளிகள் பெயரை போலி ஆவணம் இணைத்து பதிவேற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, கணினி சேவை மைய உரிமையாளர்கள் ராகுல் மற்றும் கலையரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments