கில்லாடி சைபர் கிரிமினல்கள்.. அரங்கேறும் நூதன மோசடி..!

0 50508

ப்ளிப்கார்ட் இணைய தளத்தின் பெயரில் நடந்த ஆன்லைன் மோசடியில், இழந்த பணத்தை மீட்க முயன்ற சென்னை இளம்பெண் ஒருவர் , போலி போன்-பே வாடிக்கையாளர் சேவை மோசடிக் கும்பலிடம் சிக்கி, மேலும் பணத்தை இழந்த நிலையில், சைபர் கிரைம் போலீசார் உதவியோடு, பணம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...

ஏமாறுவோர் இருக்கும் வரை, ஏமாற்றுவோருக்கு எப்போதும் லாபம்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. சூளைமேடு பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் மகாலட்சுமியின் செல்போனுக்கு பிளிப்கார்ட் பெயரில் 'லிங்க்' ஒன்று குறுஞ்செய்தியாக வந்துள்ளது.

15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் 4 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் என நம்பி, ஆன்லைனில் போன்-பே மூலம் 4 ஆயிரம் ரூபாய் செலுத்திய மகாலட்சுமி, சில நாட்கள் கழித்து ஒரு புடவைக்கு ஆர்டர் கொடுக்க, புடவை வந்து சேர்ந்து விட்டது. ஆனால் செல்போன் வந்து சேரவில்லை.

போன்-பே வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டு விசாரித்த மகாலட்சுமி, மேலும் 10 ஆயிரம் ரூபாயை இழந்தார்.

செல்போனுக்காக 4 ஆயிரம் ரூபாயை பறிகொடுத்த மகாலட்சுமி, காவல்துறையில் புகார் எதுவும் கொடுக்காமல் இருந்து வந்தார். ஆனால், சைபர் கிரைம் கில்லாடிகளிடம் மீண்டும் 10 ஆயிரம் ரூபாயை இழந்ததால், காவல்துறை உதவியை அவர் நாடினார். புகார் கொடுத்த 24 மணி நேரத்திற்குள் பறிகொடுத்த 10 ஆயிரம் ரூபாய், வங்கி உதவியுடன் மீட்கப்பட்டது.

போன் பே, கூகுள் பே, பிளிப்கார்ட், அமேசான் என பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் பெயரில் கூகுள் தளத்தில் போலி வாடிக்கையாளர் சேவை எண்ணைப் பதிவிட்டு, மோசடியை அரங்கேற்ற பல கும்பல்கள், கடை விரித்துக் காத்திருக்கின்றன.

எனவே, செல்போனில் வரும் லிங்க் போன்று குறுஞ்செய்தியை நம்பி,பணத்தை இழக்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். உஷாராகவும், விழிப்புணர்வுடனும் இருந்தால் சைபர் கில்லாடிகளிடம் சிக்காமல், நிச்சயம் தப்பிக்க முடியும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments