கள்ளிக்குளம் கல்லூரியில் நேர்முகத்தேர்வுக்கு தடை..! லட்சக்கணக்கில் பண பேரம் புகார்

0 4052
கள்ளிக்குளம் கல்லூரியில் நேர்முகத்தேர்வுக்கு தடை..! லட்சக்கணக்கில் பண பேரம் புகார்

கள்ளிக்குளத்தில் உள்ள தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் 19 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வுக்கு உயர் நீதிமன்ற மதுரைகிளை தடை வித்துள்ளது. லட்சங்களை லஞ்சமாக பெற்றுக் கொண்டு பணி வழங்கும் புகாருக்குள்ளாகி இருக்கும் கல்லூரியின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

நெல்லை மாவட்டம் டி. கள்ளிக்குளத்தில் 50 ஆண்டுகள் பழமையான தட்சணமாற நாடார் சங்க கலை அறிவியல் கல்லூரி இயக்கி வருகின்றது. மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைகழக கட்டுப்பாட்டில் அரசு உதவி பெற்று இயங்கிவரும் இக்கல்லூரியில் ஆண்டு தோறும் 2500 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த கல்லூரியில் கணிதம், இயற்பியல், தாவரவியல் வணிகவியல் உள்ளிட்ட துறைகளுக்கு 11 உதவி பேராசிரியர்களும், லேப், டைப்பிஸ்ட் மற்றும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு 8 பேர் என மொத்தம் 19 காலிபணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர்.

கடந்த 4 மற்றும் 5 ந்தேதிகளில் நேர்முகத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருந்த கல்லூரி நிர்வாகம், லட்சக்கணக்கில் பணம் கொடுக்கும் நபர்களுக்கு கல்லூரியில் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படுவதாக புகார் எழுந்தது.

உதவி பேராசிரியர் பணிக்கு 20 லட்சம் ரூபாய் வரையிலும், அலுவலக உதவியாளர் பணிக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலும் கையூட்டாக பெறப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து தட்சணமாற நாடார் சங்க உறுப்பினரான கிருஷ்ணமூர்த்தி என்ற வழக்கறிஞர் அந்த கல்லூரியில் நேர்முகத்தேர்வு நடத்தி வேலைக்கு ஆட்களை நியமனம் செய்ய தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், கள்ளிக்குளம் கல்லூரியில் காலிப்பணியிடங்களை நிரப்ப நேர்முகத்தேர்வு நடத்தப்படுவதற்கு நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி கல்லூரியில் நேர்முக தேர்வு நடந்து வந்ததால் தடையாணை பெற்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி நேரடியாக கல்லூரிக்கு சென்று நீதிமன்ற தடை குறித்து சுட்டிக்காட்டிய போதும், அதனை கண்டுகொள்ளாத கல்லூரி நிர்வாகம் தடையை மீறி நேர்முக தேர்வை நடத்தி முடித்ததாக கூறப்படுகின்றது.

அதே நேரத்தில் கல்லூரியின் செயலாளர் சண்முகவேல் கூறும் போது நீதிமன்ற தடையாணை எதுவும் தங்களுக்கு வரவில்லை என்றும் நியாயமான முறையில் தகுதியுள்ளவர்களை நேர்முகத்தேர்வு மூலம் இட ஒதுக்கீட்டின் படி பணிக்கு தேர்ந்தெடுத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments