5 உயிர்களை பலி வாங்கிய தீ.. தீவிரமாகும் விசாரணை..!

0 4818
சேலத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சேலத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

சேலம் நகரமலை பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மர அறுவை ஆலை வைத்து நடத்தி வருகிறார். அதனால் வீடு முழுவதும் பல்வேறு வேலைப்பாடுகள் நிறைந்த மரத்தாலான அழகுப் பொருட்களால் நிரப்பி வைத்துள்ளார். இந்த நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு இரண்டு மணியளவில் வீட்டில் தீப்பிடித்திருக்கிறது.

மரப் பொருட்கள் நிறைந்திருந்ததால் தீ மளமளவென வீடு முழுக்க பரவியுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

அதற்குள் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த அன்பழகனின் மனைவி புஷ்பா, சகோதரர் கார்த்திக், கார்திக்கின் மனைவி மகேஸ்வரி, கார்திக்கின் மகன்கள் 12 வயதான சர்வேஷ் 8 வயதான முகேஷ் ஆகிய 5 பேரும் மூச்சுத்திணறியும் உடல் கருகியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மற்றொரு அறையில் படுத்திருந்த அன்பழகனும் அவரது பெற்றோரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்தை கேள்வியுற்று வந்த உறவினர்கள் கதறி அழுதனர்.

ஏசி ஓடிக்கொண்டிருந்ததால் காற்று வெளியே செல்லவோ, உள்ளே வரவோ முடியாத அளவுக்கு கண்ணாடி ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வீடு முழுவதும் புகை சூழ்ந்து, உள்ளே இருந்தவர்களுக்கு வெளியே செல்லும் வழி தெரியாமல் போயிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறும் போலீசார், கைரேகை நிபுணர்களைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம், இந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாகவும் ஒரே நேரத்தில் 5 பேர் உயிரிழந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments