திறக்கப்பட்ட கோவில்கள்.. பக்தர்கள் சுவாமி தரிசனம்..!

0 2938
தமிழக அரசின் தளர்வுகளைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் அனைத்து கோவில்களிலும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் தரிசனத்திற்காக இன்று அனுமதிக்கப்படுகின்றனர்.

தமிழக அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள பெரிய கோவில்கள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டதால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் அதிகாலையிலேயே திறக்கப்பட்ட மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்ட பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவிலில் டோக்கன் முறையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். முகக்கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவதோடு, தனிநபர் இடைவெளியை பின்பற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் அரசு வழிகாட்டு நடைமுறைகளுடன் மீண்டும் அரசு பேருந்து சேவை தொடங்கியுள்ளது. கோவையில் 50 சதவீத பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன. தேவைக்கு ஏற்ப பேருந்துகளை கூடுதலாக இயக்கவும் கோவை அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, அவர்களுக்கு முகக்கவசம், கையுறைகள், சானிடைசர்கள் வழங்கப்பட்டுள்ளன. 

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், 5 மாதங்களுக்கு பின்னர் பலத்த கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு, தேங்காய், மாலை உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டுவரவும், தரிசனத்துக்கு பின்னர் பக்தர்கள் கோவிலுக்கும் அமரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அறுபடை வீடுகளின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் 165 நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு உடல்வெப்பம் பரிசோதிக்கப்பட்டு, கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியும் வழங்கப்பட்டது. 

பழனி முருகன் கோவிலில் தரிசனத்துக்காக அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள், படிப்பாதை வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டனர். முன்பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதல்நாளில் உள்ளூர் பக்தர்களும் குவிந்ததால் முன்பதிவு செய்யாதவர்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில், கீழ கோபுரவாயில் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். முகக்கவசம் அணிந்து வந்த பக்தர்கள், உடல்வெப்பம் பரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்னரே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments