தொடர் ஊரடங்கால்.. அகஸ்தியா திரையரங்கம் நிரந்தரமாக மூடப்பட்டது..!

0 4889

மெட்ரோ ரெயில் பணியால் முடங்கிய சென்னை அகஸ்தியா திரையரங்கை, ஊரடங்கு தொடர்வதால் நிரந்தரமாக மூடப்போவதாக உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். 70 எம் எம் திரையில் 1004 இருக்கைகளுடன் மூன்று தலைமுறை முன்னனி நாயகர்களின் ஏராளமான வெற்றிப்படங்களை திரையிட்ட 53 ஆண்டுகள் பழமையான அகஸ்தியாவின் மலரும் நினைவுகள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

1967ல் பாமா விஜயத்துடன் வட சென்னையின் தண்டையார் பேட்டையில் தொடங்கப்பட்டது அகஸ்தியா திரையரங்கம். 1973ல் வெளியான எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக 300 நாட்கள் ஓடி சாதனைப்படைத்தது..!

தொடர்ந்து காவல்காரன், மீனவ நண்பன் என எம்.ஜி.ஆர் படங்கள் இங்கு சக்கை போடு போட்டது. சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான சிவந்த மண், சொர்க்கம் படங்களும் திரையிடப்பட்டதாக கூறும் திரையரங்க நிர்வாகத்தினர் இந்த திரையரங்கில் அப்போது குறைந்த பட்ச கட்டணம் 1 ரூபாய் 10 காசு மட்டுமே என்கின்றனர்.

அப்போது தொலைக்காட்சி இல்லை என்பதாலும் வெகு சில திரையரங்குகளிலே படம் ரிலீஸ் செய்யப்படும் என்பதாலும், தினமும் மக்கள் திருவிழாக்கூட்டமாக கூடியதாகவும், டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் காத்திருந்து அடுத்த காட்சி பார்த்து சென்றதாக திரையரங்கு நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

நடிகர் ரஜினியின் அறிமுகப்படமான, அபூர்வ ராகங்கள், பைரவி, படிக்காதவன், கமல்ஹாசனின் விக்ரம் , அபூர்வ சகோதரர்கள், குருதி புனல், தேவர் மகன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களை 70 எம்.எம் திரையில் காண்பித்து பலதரப்பு ரசிகர்களையும் குதூகலப்படுத்தியது இந்த திரையரங்கம்..!

விஜய்யின் குஷி, கில்லி, அஜீத்தின் தீனா, சூர்யாவின் காக்க காக்க கார்த்தியின் கைதி வரை இந்த திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியவை. வட சென்னையில் பெரிய கார்பார்க்கிங் வசதியுடன் முன் பக்கம் பூங்காவுடன் கூடிய ஒரே திரையரங்கு அகஸ்தியா மட்டுமே..!

எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜீத், விஜய் என மூன்று தலைமுறை முன்னனி நடிகர்களும் தங்கள் படங்களை மக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள இங்கு வந்து பாக்ஸ் இருக்கையில் அமர்ந்து பார்த்து சென்றது எல்லாம் ஒரு காலம் என்கின்றனர்

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக மெட்ரோ ரெயில் பணி தொடங்கிய பின்னர் இந்த திரையரங்கிற்கு செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டு சிறிய பாலம் அமைக்கப்பட்டு கார்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்போதிருந்தே ரசிகர்களின் வருகையும் வெகுவாக குறைந்து நட்டத்தில் இயங்க தொடங்கியுள்ளது.

1004 இருக்கைகள் கொண்ட இங்கு ஆரம்பகாலம் தொட்டே இவர்களுக்கு எம்.ஜி.ஆர் படங்கள் பெரிய அளவில் கைகொடுத்துள்ளது. அவரது படத்தை திரையிட்டால் எங்கிருந்தாலும் மக்கள் கூட்டம் இங்கு வந்துவிடும் என்கிறார்கள்.

முழு ஊரடங்கிற்கு முன்பாக ரகசிய போலீஸ் 115 படத்தோடு கொரோனா ஊரடங்கால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த அகஸ்தியா திரையரங்கத்தை, தொடர்ந்து இயக்க இயலாமல் நிரந்தரமாக மூடுவது என்று நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

இன்னும் சில மாதங்கள் கழித்து திரையரங்குகள் இயக்க அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில் முதலில் ஏசி வசதி இல்லாத விசாலமான, திரையரங்குகளுக்கு மட்டுமே முதற்கட்டமாக அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில் சென்னையில் குளிர்சாதன வசதியே இல்லாமல் இயங்கி வந்த ஒரே விசாலமான திரையரங்கான அகஸ்தியா மூடப்படுவது குறிப்பிடதக்கது.

இந்த பகுதியில் நாளுக்கு நாள் இடத்தின் மதிப்பு உயர்ந்து வரும் நிலையில் வருமானமில்லா சொத்தாக மாறிபோனதால் இந்த திரையரங்கு நிரந்தரமாக மூடப்படுகின்றது என்பதே உண்மை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments